Header Ads Widget

Responsive Advertisement

ஊடக உலகில் உன்னத வாழ்வு! பீ.வினோறாச் ,கிளரீசியன்சபை.



ஊடக உலகில் உன்னத வாழ்வு!    

                 பீ.வினோறாச் ,கிளரீசியன்சபை.


                  வாழ்வு அழகானது. ஒவ்வொரு நிமிடமும் புதுமையானது. ஒவ்வொரு நொடியும் தன்னை வியப்பான நிகழ்வுகளால் நிறைத்து வைத்திருக்கிறது. இந்த உன்னதமான வாழ்வில் நாமும் பங்கு கொள்கிறோம். வாழ்வு என்பது எம்மை பற்றியது மட்டுமல்ல.எனக்கு மட்டும் உரித்தானது அல்ல.  பிறப்பு தொடங்கி இறப்பு வரைக்கும்  தாம்  கடந்து வந்த நிகழ்வுகளின் தொகுப்பினையே  பலர் வாழ்வென வரையறை செய்கின்றனர். ஆனால் இதைவிட ஆழமானது     வாழ்வு.வார்த்தைகளால் விளக்க இயலா விசாலமான யதார்த்தம் இது. என்றுமே இது ஒரு நிகழ்கால நிஜம்.இதில் நாம் பங்கு பெறுகிறோம். பங்குபெறும் கால வரையறையைத்தான் நாம் வாழ் நாள் என்கிறோம்.எல்லைகள் கடந்தது எனினும் ,எங்கும் வியாபித்திருக்கிறது வாழ்வு.நாம் வாழும் நாட்களுக்கு தொடக்கமுண்டு முடிவுமுண்டு.ஆனால் வாழ்வுக்கு இவைகள் கிடையாது.இதுவே நம் கிறீத்தவ நம்பிக்கை. நாம் வாழும் சூழலும் அதில் நாம் பெறும் வாய்ப்புகளும் மாறுபடலாம்.ஆனால் வாழ்வு எல்லோர்க்கும் பொதுவான ஒரு  பெருவெளி.                                    

 நிகள்வுகளும் அனுபவங்களும்     

வாழ்வில் நாம் பங்கு பெறும் போது இரு வேறு விடயங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று "நிகழ்வுகள்". அடுத்தது "அனுபவங்கள்".எம்மைச் சூழ இடம்பெறும் அனைத்தும் வெறும் நிகழ் வுகளே.இந்நிகழ்வுகளுடன் நாம் என்ன செய்கிறோம்?இவற்றை நாம் எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறோம் அல்லது அதனை எப்படி கையாள்கிறோம்?என்பதைப் பொறுத்தே அனுபவங்கள் பிறக்கின்றன.நாங்கள் இடமளித்தால் மட்டுமே நிகழ்வுகள் அனுபவங்களாய் மாறி எம்மில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இந்த நிகழ்வுகளில் எதை எடுப்பது? எதை விடுப்பது? எவ்வகை அனுபவமாக அவற்றை தொடுப்பது ?போன்றவை எல்லாம் எம்மைப் பொறுத்ததே.நிகழ்வுகள் அனைத்தும் அனுபவங்களாகிவிட முடியாது. எம் வாழ் நாட்களில் நாம் காணும்  நிகழ்வுகளை நல்ல

அல்லது அதற்க்கு மாறான அனுபவங்களாக மாற்றவும்,அவற்றிற்க்கு எச்சூழலிலும் ஆக்கபூர்வமான அர்த்தங்களை கொடுத்து எதிர்நோக்குடன் வாழ்வதற்குமான ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்திருக்கிறது.தன் இயலாமையை தன்னிடமிருந்து அகற்றிவிடும்படி கெஞ்சிய பவுலுக்கு யேசு கூறிய பதில் "என் அருள் உனக்கு போதும் "(2கொருந்12:9) தனிமனித சுதந்திரமும் பொருள் பொதிந்த வாழ்வும்.                    அனைத்தையும் சாதிக்க தேவையான  அருளோடு கூடவே அதற்கான சுதந்திரமும் எமக்குள் நிறைவாய் இருக்கிறது.ஒரு மனிதனிடம் இருந்து அனைத்தையும் பறித்து விடலாம்.ஆனால் குறிப்பிட்ட ஒரு சூழலில் அவள் /அவன் தன்னுடைய நடத்தையை தான் விரும்பிய வகையில் தேர்ந்து கொள்வதற்கான இறுதி சுதந்திரத்தை எவருமே பறித்துவிட முடியாது".(ViktorE.Frankl)தெரிவுகளும் முடிவுகளும் நம் கைகளில்.இந்த சுதந்திரம் தான் மற்ற படைப்புகளிலிருந்து மனிதர் தனித்துவமானவர் என்பதற்கான சான்று.இத்தனை தனிப் பண்புகளோடு இறைவன் எமக்கு வழங்கியிருக்கும் இவ்வாழ்வுக்கான வாய்ப்பில் நம் தேடல் நின்றுவிடலாம்.ஏனனில் அது நம் தெரிவு.ஆனால் வாழ்வின் பொருள் தொலைந்து போவதில்லை.இப் பிரபஞ்சத்தில் எதுவும் தனியாகவும் இல்லை ,காரணம் இன்றியும் இல்லை. ஒவ்வொன்றும் மற்றவையோடு இணைக்கப்பட்டிருக்கின்றன.அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றன."நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்! உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்?"என்கிறது இறை வார்த்தை(சா.ஞா.11:24)இவ்வுண்மையை உணர்ந்த மனிதரின் வாழ்வு   நீரோடையின் அருகிலுள்ள மரங்கள் போல என்றும் செழிப்புற்றிருக்கும்..அலை கடல் நடுவில் பாறை போல் உறுதியோடிருக்கும்.                    

வாழ்வின் மட்டுப்பாடுகள்                    

மேற் கண்ட வாழ்வியல் உண்மைகளுக்கு புறம்பாக நாம் நடைமுறை வாழ்வில் மட்டுப்பாடுகள்,இயலாமைகள் என்று நம்பிக்கொண்டிருக்கும்  விடையங்கள் பெரும்பாலும் நம் சிந்தனைச் சிறைகளே.அடிமை விலங்குகள் உடலில் இருந்தால் உடைப்பது இலகு.ஆனால் சிந்தனைகளிலும் மன நிலைகளிலும் மனிதர்களை  சிறைப் படுத்தி விட்டால் விடுதலை என்பது சற்று கடினம்தான். நமக்கு தெரிகிறதோ இல்லையோ,இன்றைய வர்த்தக உலகம் இவ் உளவியல் உண்மையை தெழிவாய் தெரிந்து வைத்திருக்கிறது. தம் மன கோட்டையின் சிற்றறைகளை விட்டு வெளிவர தயங்குதல் மனித இயல்பு.ஏனெனில் சிற்றறைகள் சுகமானவை, சுலபமானவை.இன்று சுகமே பலரின் வாழ்க்கை தேடலாகவும் சுலபமே இவர்கள் தேர்ந்து கொள்ளும் வழியாகவும் இருப்பதால் பலரின் நிலை பாழடைந்த வீடு போல் ஒளி இழந்து  கிடக்கிறது. இவர்கள் மீண்டெழுவதற்கு தம்மை திரும்பவும் வாழ்வோடு இணைப்பதை தவிர வழி ஏதுமில்லை.                                    

இறைவனே வாழ்வு                          

இருப்பவை அனைத்திற்கும் அடிப்படையாய் அமைந்தவர் இறைவன் ஒருவரே. ஆக, கிறீத்வர் நமக்கு வாழ்வு என்பது என்றும் உள்ள,எங்கும் உள்ள இறை பிரசன்னம்." அவரைச் சார்ந்து தான் நாம் வாழ்கிறோம், இயங்குகிறோம் இருக்கிறோம் ".(திபணி17:28)இந்த இறைவனைத் தவிர்த்து நாம் வேறெங்கும் இல்லை .ஏனெனில் "அனைத்தும் அவரிடம் இருந்தே வந்தன ,அவராலே உண்டாயின,அவருக்காகவே இருக்கின்றன".என்கிறது விவிலியம்(உரோ11:36).நாம் அவரில் இருப்பதால் அவர் என்றும் எம்மை விட்டு விலகுவதில்லை." எம் சிந்தனையில் மட்டுமே நாம் இறைவனை விட்டு பிரிய முடியும்"(Fr.Richard Rohr OFM).இவ் இறை இருப்பை நாம் ஆழமாக உணரும் ஊடகம்,நாம் நம்மோடும்,மற்ற மனிதரோடும் ,படைப்புக்களோடும் கொள்கின்ற அன்புறவு.ஏனெனில் "அன்பு உலகின் பல்வேறு கூறுகளை ஈர்த்து இணைத்து ஒன்றாய் தொகுக்கும் ஊடகம்." (Pierre Teilhar de Chardin).இதற்கு பல படி மேல் சென்று "கடவுள் அன்பாய் இருக்கிறார் " என்கிறது இறைவார்த்தை.(1யோவா4:8)


தொடர்பாடலும் உறவாடலும்                               

இந்த அன்புறவை ஆழப்படுத்த தேவையான வழிகளை இன்றைய ஊடக உலகம் என்றுமில்லாதவாறு தாராளமாய் வழங்குவது உண்மைதான்.ஊடகங்களின் முக்கியத்துவத்தையும் சமூகங்களில் அவை செலுத்தும் தாக்கத்தையும் அறிந்து கொள்ளாதவர்கள் இந்த நூற்றாண்டின் போக்கினை புரிந்து கொள்ள முடியாது.ஊடகங்கள் இன்றி அமையாது வாழ்வு என்ற நிலைக்கு இன்றைய உலகம் தள்ளப்பட்டிருக்கின்றது.எனவே,"ஊடகங்களைப் பயன்படுத்துவதா?இல்லையா?என்பது அல்ல நமது தெரிவு.மாறாக எப்படி அவற்றை திறம்பட கையாள்வது என்பது தான் நாம் எழுப்ப வேண்டிய வினா "(Erik Qualman).சமூக ஊடகங்களின்  சமகால சம்பங்களை கூர்ந்து நோக்கினால்,உறவாடலுக்கும் தொடர்பாடலுக்கும் இடையேயான வேறுபாடு மறக்கப்பட்டு ,இரண்டும் ஒன்றுதான் என்ற  தவறான கருத்தியல் உருவாகிவருவது புரியும்.இதுதான் நாம் வாழும் இன்றய ஊடக உலகம் உன்னதமான அன்புறவிவிற்கு விடுத்திருக்கும் சவால்.இங்கு நாம் ஒரு விடையத்தை தெளிவுற தெரிந்து கொள்ள வேண்டும்.தொடர்பு வேறு,உறவு வேறு. தொடர்பு தேவைகளை அடிப்படையாக கொண்டது.இதில் மறைவு இருக்கலாம்.ஆனால் உறவில் அவ்வாறில்லை.மறைவு இருந்தால் அதன் பெயர் உறவு இல்லை மாறாக தொடர்பு.இவற்றிற்கு மேலாய் உறவு, தூய அன்பையும் அர்ப்பணத்தையும் அடிப்படையாகக் கொண்டது.இதில் சரி எது? பிழை எது? என்ற வாதம் பொருத்தமற்றது .ஏனெனில் இரண்டுமே வாழ்வில் தேவையானதுதான் .தேவையற்றது யாதெனில் உறவின் பெயரில் தொடர்பு,தொடர்பு போல் குறுகிய உறவு.இதனை தேர்ந்து தெழிந்தவர் தொடர்பும் சிறந்ததே,உறவும் உயர்ந்ததே.                           

சமூகங்களில் ஊடகங்களின் தாக்கம்                  

பின்நவீனத்துவ சமுதாயம் (Post-modern society) என வர்ணிக்கப்படும் நாம் வாழும் இன்றைய சமூகத்தில் ஊடகங்கள்தான் பல முக்கிய விடயங்களை நிர்ணயிக்கின்ற சக்தியாக உருவெடுத்து இருக்கின்றன.ஊடகங்கள் உண்மையை (Reality)பிரதிபலிக்க வேண்டும் .ஆனால் இதற்க்கு மாறாக,ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதுதான் உண்மை என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகின்றது (Hyperreality).இதை எம்மில் பலர் நம்பிக் கொண்டிருப்பது தான் கவலைக்குரிய விடயமாகும்.ஏனெனில் இம் மூடநம்பிக்கையை பல அரசியல் ,வர்த்தக ,மதவாத, அமைப்புகள் மிகக் கற்சிதமாக  பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.மக்களிடையே இன மத பிரதேசவாத உணர்வுகளை தூண்டி அவற்றை வர்த்தக வருமானங்களாகவும் வாக்கு வங்கிகளாகவும் மாற்றுவதனையே நோக்காய் கொண்டு வலைவெளியில் உலா வருகின்றன  பல ஊடகங்கள்.பல வேளைகளில் நாம் எதை உண்ண வேண்டும்? எதை உடுத்த  வேண்டும் ?எதை நாகரிகம் எனக் கருத வேண்டும் ?என்பதனை தீர்மானிப்பது நாங்கள் அல்ல.மாறாக தொலைக்காட்சி  விளம்பரங்ள் ,தொடர் நாடகங்கள் மற்றும் அதில் வருகின்ற காட்சிகளும் கதாபாத்திரங்களும்தன்.இவ்வாறான ஊடக மாயைகளே இன்றய சமூங்கங்களும் தனி மனிதர்களும் தம் தனித்துவமான அடையாளங்களை தொலைத்துக்கொண்டிருப்பதற்கான காரணம்.நான் யார்?எனது அடிப்படை அடையாளம் என்ன ?எனது உடலின் தோற்றம், மற்றும் சமூக அந்தஸ்து என்பவை எவ்வாறு இருக்க வேண்டும் ?என்ற கேள்விகளுக்கெல்லாம் பலர் இன்று சமூக ஊடகங்களில்த்தான் பதில் தேடுகின்றனர். ஊடகங்களில் எத்தனை பேர் என்னை பார்க்கிறார்கள் (views),விரும்புகிறார்கள்(likes)பின்தொடர்கிறார்கள்(Follows)என்பவையெல்லாம்  வெறும் ஊடக மொழிநடைகளே தவிர நம் வாழ்வை அளவிடும் கருவிகளல்ல. ஏனனில்,கடவுள் "தம் உருவிலும் சாயலிலும் மானிடரைப் படைத்தார் அவர்களை ஆணும் பெண்ணுமாக படைத்தார்"(தொ.நூ1:27)இதுவே நம் ஒவ்வொருவரினதும் உண்மையான அடையயாளம்.எவர் எம்மை பற்றி என்ன சொன்னாலும்,இறைவன் நம்மை பார்த்து என்றும்  கூறுவது ஒன்றுதான்."என்பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்(ள்); மதிப்புமிக்கவன்(ள்); நான் உன்மேல் அன்பு கூர்கிறேன் "(எசாயா43:4).ஆனால் இன்று,கண்ணிமைக்கும் இடைவெளியில் மடைதிறந்த வெள்ளமாய் ஊடகங்கள் வாரி வளங்கிடும் தகவல்களை சல்லடைகள் ஏதுமன்றி உள்வாங்கிக் கொள்வதன் விளைவுதான் ,இன்று பலர்  வேரறுந்த மரங்கள் போல வாழ்வெனும்  ஊற்றில் இருந்து துண்டிக்கப்பட்டு வெறும் கற்பனை உலகில் வாழ்வதற்கான காரணம்.                              

 நிறைவாய் 

"இணையம்,வலைத்தளங்கள்,தகவல் பரிமாற்றம் என்வை இறைவனின் கொடைகள்.இருப்பினும் "தொடர்பாடலின் நம்பகத்தன்மையை தீர்மானிப்பது தொழிநுட்பமல்ல.மாறாக மனித உள்ளமும் ,இவற்றை நாம் எங்கள் தேவைகளுக்கு ஏற்றாற்போல் சிறப்புற பயன்படுத்துவதற்குமான திறனும்தான்"(தி.த பிரான்சிஸ் )வாழ்வை வழமாக்கவும் இதற்கு தேவையான அன்புறவை ஆழப்படுத்தவுமே ஊடகங்கள் நமக்கு உதவவேண்டும்.ஊடகங்கள் போலவே வேகமாக நம் வாழ்நாட்கள் மாறியிருந்தாலும்,தரையில் தடம் பதித்து வானில் கை அசைத்தவர் போல வாழ்வோடு நம்மை உறிதியாய் இணைத்து உயர்ந்த கனவுகள் கொண்ட சுதந்திர மனிதராய் வாழவேண்டும். நாம் வாழ பிறந்தவர்கள்.இவ் வாழ்வை நாம் நிறைவாய் பெற வேண்டும் என்பதுவே இறை விருப்பம்."நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்"(யோவான்10:10).எனவே ஒவ்வொரு கணமும் அதற்கான வழிதனை மட்டுமே தேர்ந்து தெளிந்து சிறப்புடன் வாழ்வோம்.வாழ்வை மட்டுமே பகிரும் ஊடகங்களாய் உருமாறுவோம்.

https://www.youtube.com/watch?v=Yq8qFzKSsnc&t=4s

Post a Comment

0 Comments