இயேசுவின் மதுரமான இருதயமே
(கத்தோலிக்கத் திருஅவையில் இயேசுவின் தூய இதயப் பக்தி)
வைகாசி மாதம் முழுவதும் மரியன்னையின் வணக்க மாதத்தினை சிறப்புடன் நினைவு கூர்கின்ற திருஅவையானது ஆனி மாதம் முழுவதும் இயேசுவின் தூய இதயப் பக்தியினை சிறப்புடன் நினைவுகூர்வதும் அத்துடன் இயேசுவின் தூய இதயப் பெருவிழாவினையும் இம்மாதத்தில் கொண்டாடுவது வழமையாகும். ஆயினும் அத்தகைய வழமை இன்று பலவிடங்களில் வழக்கொழிந்து விட்டதும், குறைவடைந்து வருவதும் வேதனைக்குரியதாகும். இப்பேரிடர் காலமானது உலகிற்கு போதியளவு நேரத்தினை தந்துள்ளடன் மனிதர்கள் தங்களது மூலங்களுக்குள் நுழைந்து, தொலைத்தவற்றை மீளவும் நடைமுறைக்கு கொணரவும் உதவியுள்ளது என்றால் மிகையாகாது. அந்த வகையில் திருஅவையில் இயேசுவின் தூய இதயப் பக்தியினைக் குறித்து சிந்திப்பது சிறப்பாகும் எனும் எண்ணத்தில் உருவாகியதே இவ்வாக்கம்.
அனுபவப் பகிர்வு
வயதான கத்தோலிக்கத் தந்தை ஒரு தடவை தன் வீட்டில் வருடந்தோறும் நடைபெறுகின்ற திருஇருதய அரசினை நிறுவியதன் புதுப்பித்தல் நிகழ்வின் 80வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ள அழைத்திருந்தார். நானும் அவரது அழைப்பிற்கு செவிசாய்த்து சென்றிருந்தேன். அந்நிகழ்வு முடிந்த பிற்பாடு அவ்வில்லத்தின் தலைவர் என்னிடத்தில் ‘எங்கள் வீட்டில் திருஇருதய அரசினை நிறுவுதல் நிகழ்வு 1922ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதனை என் தந்தையார் அவரது காலத்தில் ஒரு வேண்டுதல் பக்தி முயற்சியாக ஆரம்பித்தார். அதனை அவருக்கு பின்பாக நானும், என் வீட்டாரும் தொடர்ந்து கொண்டு வருகின்றோம். என்னைத் தொடர்ந்து எனது பிள்ளைகளும் இதனைத் தொடர வேண்டுமென்பதே என் அவா’ என்றுகூறி அதற்கான ஆதாரங்களையும், ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்பட்ட பிற்பாடு பங்குத் தந்தையர்களால் இடப்பட்ட திகதி கையொப்பம் போன்றவற்றையும் காண்பித்தார். அதனைக்கண்டு நான் மலைத்துப் போனேன். அதனைவிட பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் அவரது பிள்ளைகள் இன்றும் அம்மரபினை அழியவிடாமல் பாதுகாத்து வருகின்றார்கள். 2022ஆம் ஆண்டில் (வருகிற வருடம்) நூற்றாண்டு விழாவினை அந்நிகழ்வு காணவுள்ளமை இரட்டிப்பு மகிழ்ச்சியாகும்.
திருவிவிலியமும் இறையன்பும்
திருவிவிலியம் இறைவன் மனுக்குலத்தின் மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்பினை வெளிப்படுத்தும் நூலாகும். மனிதர்கள் எத்துணை பாவங்களைப்புரிந்து அவரது அன்பிலிருந்து விலகிச் சென்றபோதும் இழந்துபோன ஆட்டைத் தேடிச்செல்கின்ற ஆயனாக இறைவன் தன் மக்களைத் தேடுகின்றார். அரவணைக்கின்றார். கட்டியணைத்து கொண்டாடுகின்றார். இறைவனின் அன்பினை இயேசுகிறிஸ்து தமது வாழ்வினில் அபரிதமாக வெளிப்படுத்தியுள்ளமையினை புதிய ஏற்பாடானது பல்வேறுபட்ட சம்பவங்கள்ää போதனைகள் வாயிலாக எடுத்தியம்புகின்றது. இயேசுவே “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத். 11:28-30) என்கிறார். யோவான் நற்செய்தியாளர் “உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதி வரையும் அன்பு செலுத்தினார்” (13:1) என்கிறார். “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு யாரிடமும் இல்லை” (யோவா. 15:13) என்று போதித்த இயேசு சிலுவையில் தம்மை வெறுத்தவர்களையும் அன்பு செய்து அவர்களுக்காகவும் தன்னுயிரைக் கையளித்தார் என்பதனை நாமறிவோம். சிலுவையில் அவரது குத்தித் திறக்கப்பட்ட விலாவிலிருந்து வழிந்தோடிய இரத்தம் தண்ணீர் ஆகியன திருஅவையின் மீட்பளிக்கும் அருளடையாளமாக மாறியது (காண்கää யோவா. 19:34). இதனால் அவர் மனுக்குலத்தின்மீது கொண்ட அளவிட முடியாத அன்பினைக் கண்டு கொண்டோம். அதனாற்தான் பவுலடிகளார் “கிறிஸ்துவின் அன்பில் இருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எதுவும் இல்லை” (உரோ. 8:35) என்கிறார்.
திருஅவை வரலாற்றில் தூய இதயப் பக்தி
திருஅவையின் வரலாற்றில் அதன் தந்தையர்களுள் ஒருவராகிய மறைசாட்சி புனித ஜஸ்ரின் (கி.பி.165) “கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவிடமிருந்து துளிர்த்த உண்மை இஸ்ரயேலராக இருக்கிறோம். ஏனெனில் ஒரு பாறையைப் போன்று அவரது இதயத்தில் நாம் செதுக்கப்பட்டுள்ளோம்” என்கிறார். அவ்வாறே புனித இரனேயுஸ் (202) “திருஅவை என்பது கிறிஸ்துவின் இதயத்தில் இருந்து நம்மிடம் வழிந்துவரும் வாழ்வளிக்கும் தண்ணீரின் ஊற்றாகும்” எனப் பகர்கின்றார். திருஅவையின் வரலாற்றில் முதல் பதினொரு நூற்றாண்டுகளில் இயேசுவின் இதயத்தின் மீதான பக்தி குறித்த குறிப்புக்கள் குறைவாகவே காணக் கிடைக்கின்றன. ஆயினும் சிலுவைப் போர்கள் காலத்தில் இயேசுவின் ஐந்து திருக்காயங்கள் மீதான பக்தி வளர்ச்சி பெற்று வளர்ந்தது. இதன் வளர்ச்சியில் புனித பெர்னார்ட் (1153) புனித பிரான்சிஸ் அசிசியார் (1226) முக்கிய பங்கு வகித்தனர். “இயேசுவின் குத்தித் திறக்கப்பட்ட விலாவில் அவரது நன்மைத்தனமும் அவரது இதயத்தின் அன்பும் வெளிப்பட்டன” என்று புனித பெர்னார்ட் குறிப்பிடுகின்றார். இதிலிருந்தே இயேசுவின் இதயத்தின் மீதான தனிநபர் பக்தி முயற்சிகள் உருவாக்கம் பெறலாயின. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெனடிக்டன் சபைத்துறவி புனித பெரிய ஹேட்ரூட் (1301) St. Gertrude the Great இயேசுவின் இதய பக்தியினை தனிப்பட்ட முறையினில் கடைப்பிடித்து வந்தவர்களுள் முக்கியமானவர்.
14ஆம் நூற்றாண்டில் மடங்களில் வாழ்ந்த துறவியர்கள் மாத்திரமே இயேசுவின் பக்தியின் பால் ஈர்க்கப்பட்டு கடைப்பிடித்து வந்தார்கள். 1353ஆம் ஆண்டில் திருத்தந்தை 6ஆம் இனசென்ட் இயேசுவின் தூய இதய மறைபொருளைக் கொண்டாடுவதற்கான சிறப்புத் திருப்பலியினை ஏற்படுத்தினார். 15ஆம் நூற்றாண்டில் இப்பக்தி சார்ந்த இறைவேண்டல்களும் பாடல்களும் பொதுநிலையினர் மத்தியில் பரவத் தொடங்கியது. 16ஆம் நூற்றாண்டில் பல்வேறுபட்ட துறவற சபைகளின் துறவியர் இப்பக்தி முயற்சியினை பொதுநிலையினர் மத்தியில் கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றினார்கள். போலந்து நாட்டின் இயேசுசபைத் துறவியாகிய இறையியலாளர் கஸ்பர் (1662) அவர்களின் ‘இதயங்களின் இலக்கு - இயேசுவின் இதயம்’ Meta cordium – Cor Jesu (The Goal of hearts – Heart of Jesus) எனும் நூல் இயேசுவின் இதய பக்தியின் மையத்தை வழங்கியது. பிரான்ஸ் நாட்டின் ஜோன் எவுடஸ் (St. John Eudes 1680) என்கிற புனிதர் இயேசுவின் இதய அன்பின் பக்தியை குருமடங்களிலும் குருத்துவ மாணவர்கள் மத்தியிலும் வளர்ப்பதில் அதிக அக்கறை செலுத்தினார். 1670இல் முதன்முறையாக இயேசுவின் தூய இதயத்திற்கு திருப்பலி ஆயரின் அனுமதியுடன் நடைபெற்றது. அத்திருப்பலிக்கான இறைவேண்டல்கள் திருப்புகழ்மாலை போன்றவற்றை அவரே தயாரித்தார் என்பது கூடுதல் சிறப்பாகும்.
தூய இதயப் பக்தியின் புனிதர் மார்கிரேட் மேரி அலகொக்
இயேசுவின் தூய இதய பக்தியின் சிறப்புப் பிரதிநிதியாக கிறிஸ்துவால் தெரிந்து கொள்ளப்பட்டரே பிரான்ஸ் நாட்டு அருட்சகோதரி புனித மார்கிரேட் மேரி அலகொக் (St. Margret Mary Alacoque)ஆவார். இவர் முதற்தடவையாக மார்கழித்திங்கள் 27ஆம் நாள் 1673ஆம் ஆண்டில் அன்புத்தீ பற்றியெரியும் இதயத்துடன் இயேசுகிறிஸ்துவை காட்சியில் கண்டார். இக்காட்சிகள் பதினெட்டு மாதங்களாக தொடர்ந்தன. இவரது தொடர் காட்சிகளின் பயனாக இயேசுவின் கெத்சமெனி ப10ங்காவன பாடுகளை தியானிக்கும் வண்ணம் ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையிலும் திருமணி ஆராதனை மேற்கொள்ளுமாறு பணித்தார். மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை தினத்தில் இறைமக்கள் திருப்பலியில் கலந்து நற்கருணையை உட்கொள்ள வேண்டுமென்றும் அதற்கு முன்னதாக பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு மணிநேர நற்கருணை ஆராதனை நடைபெற வேண்டுமென்றும் வலியுறுத்தினார். முதல் வெள்ளிக்கிழமை பக்தியைக் கடைப்பிடிப்போருக்கு மண்ணக விண்ணக ஆசீர்களும் வாக்குறுதியாக அளிக்கப்பட்டன. இயேசுவின் தூய இதயத்தின் விழாவானது இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவினைத் தொடர்ந்து வருகின்ற வெள்ளிக்கிழமை பெருவிழாவாகச் சிறப்பிக்கப்பட வேண்டுமென்றும் கேட்கப்பட்டது. இவற்றையெல்லாம் தமது காட்சிகள் வாயிலாக இயேசுவிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட அருட்சகோதரியவர்கள் இயேசுவின் தூய இதயப் பக்தியினை பரப்புவதில் முழு மூச்சாகச் செயல்பட்டார்.
அருட்சகோதரியவர்களின் ஆன்மீக வழிகாட்டியாகவிருந்த இயேசுசபைத் துறவி அருட்பணி கிளவுட் டே கொலம்பியர் (Claude La Colombière, S.J.) அவர்கள் அருட்சகோதரியின் காட்சிகளின் உண்மைத் தன்னையினை ஏற்றுக்கொண்டார். அதன் முதற்படியாக 1686இல் துறவற இல்லத்தில் இயேசுவின் தூய இதயத்திற்கு விழா கொண்டாடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிற்பாடு இயேசுவின் தூய இதயத்தின் பெயரால் சிற்றாலயமும் கட்டப்பட்டது. அருட்சகோதரியின் காட்சிகளின் பயனாக இயேசுவின் தூய இதயப் பக்தியானது பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. 1693இல் கத்தோலிக்கத் திருஅவையானது இப்பக்தியினைக் கடைப்பிடிப்போருக்கு ஞானப்பலன்களையும் வாரி வழங்கியது.
புனித மார்கிரேட் வழியாக தூய இதய இயேசு தமது அடியவர்களுக்கு பன்னிரு சிறப்பு வாக்குறுதிகளை பகிர்ந்துள்ளார். அவற்றுள் வாழ்க்கைக்குத் தேவையான அருள் குடும்பங்களில் அமைதி துன்பங்களில் ஆறுதல் வாழ்விலும் வாழ்வின் இறுதியிலும் ஆறுதலாய் இருத்தல் முயற்சிகள் கைகூட உதவுதல் பாவிகளுக்கு இரக்கத்தினைக் காண்பித்தல் புண்ணிய வாழ்வில் வளர உதவுதல் பக்தியுடையோர் நிறைவினைக்காண உதவுதல் தூய இதய படமுள்ள இல்லங்களை ஆசீர்வதித்தல் பாவிகளை மனம் திருப்புதல் பக்தியினை பரப்புவோரை ஆசீர்வதித்தல் பக்தியினைப் பேணுவோரை நன்மரணத்தால் ஆசீர்வதித்தல் போன்றவையாகும்.
தூய இதயப் பக்தி குறித்த திருஅவையின் அதிகார போதனை
இப்பக்தியின் வேகமான வளர்ச்சியினைக் கண்ட திருஅவையானது பல்வேறு விதமான வளர்ச்சிப் படிகளை இதன் மட்டில் மேற்கொண்டது. அதன் முதன்மையாக 1856ஆம் ஆண்டில் திருத்தந்தை 9ஆம் பயஸ் இயேசுவின் இதய விழாவினை நிறுவி கடன் திருநாளாக அறிவித்தார். வைகாசித் திங்கள் 25நாள் 1899இல் திருத்தந்தை 13ஆம் லீயோ ‘புனித ஆண்டு’ (Annum Sacrum) என்கிற தமது சுற்றுமடல் ஊடாக ஆனி மாதத்தினை ‘இயேசுவின் தூய இதய’ வணக்க மாதமாக அறிவித்தார். அதுமட்டுமல்லாது மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பக்தியினை மறைமாவட்டஙகள் தோறும் வளர்க்கவும் அறிவுரை வழங்கியிருந்தார். இவரே திருஅவையில் இவ்விழாவினை முதலாந் தர விழாவாகவும் உயர்த்தினார். இவரைத் தொடர்ந்து திருத்தந்தை 11ஆம் பயஸ் அவர்கள் 1928ஆம் ஆண்டில் இவ்விழாவினை இரட்டை நிலை விழாவாக உயர்த்தி அதற்கான எண்கிழமை வழிபாட்டினையும் இணைத்தார். 1955ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டுச் சீர்திருத்தத்தில் இதற்கான எண்கிழமை வழிபாடு நீக்கப்பட்டு இயேசுவின் தூய இதய விழா பெருவிழாவாக அங்கீகாரம் பெற்றுக்கொண்டது. 1956ஆம் ஆண்டில் திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்கள் எழுதிய ‘ஊற்றுக்களில் இருந்து முகவீர்கள்’ (Haurietis Aquas) என்ற சுற்றுமடலில் “இயேசு நம் அனைவரையும் ஒரு மனித இதயம் கொண்டு நேசித்திருக்கிறார். இதன் காரணமாக நமது பாவங்களாலும் நமது மீட்புக்காகவும் குத்தி துளைக்கப்பட்ட இயேசுவின் தூய இதயம் அன்பின் மிகச்சரியான குறியீடாகவும் அடையாளமாகவும் கருதப்படுகிறது” என்கிறார். 2002ஆம் ஆண்டு முதல் திருத்தந்தை புனித 2ஆம் யோன் பவுல் அவர்களின் அழைப்பின் பேரில் இவ்விழாவானது குருக்களின் புனிதத்துவத்திற்காக (Sanctification of Priests) மன்றாடும் சிறப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நிறைவுரை
இப்பக்தியினைக் குறித்து புனித அன்னை தெரெசா குறிப்பிடும் போது “கடந்த காலம் உங்களைத் தொந்தரவு செய்ய விடாதீர்கள். அனைத்தையும் இயேசுவின் தூய இதயத்திடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் மகிழ்ச்சியுடன் உங்கள் வாழ்வைத் தொடங்குங்கள்” என்கிறார். நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் “இயேசுவின் தூய இதயம் கடவுளது இரக்கத்தின் ஒப்பற்ற அடையாளமாக இருக்கிறது. அதிலிருந்தே மனிதகுலம் முழுவதற்குமான மீட்பு ஊற்றெடுத்து புறப்படுகிறது” என்று புகழாராம் சூட்டுகிறார்.
இவ்விழாவானது ஒவ்வொரு கத்தோலிக்க நம்பிக்கையாளர்களுக்கும் தருகின்ற உயரிய செய்தி யாதெனில் இயேசுவைப் போன்று தாழ்ச்சியும் சாந்தமும் உடையவர்களாய் என்றும் வாழ்வினில் வலம்வர வேண்டுமென்பதாகும். இயேசுவின் தூய இதய அன்பானது நம் சகோதர அன்பினில் துலங்க வேண்டும் அப்போதுதான் அவரது இதயம் நம்மைக்குறித்து மகிழ்வடையும்.
அருள்பணி அகஸ்தீன் நவரெத்தினம் (நவாஜி)
சிரேஷ்ட விரிவுரையாளர்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
ஆனி, 11. 2021


1 Comments
Good one . God bless you.
ReplyDelete