Header Ads Widget

Responsive Advertisement

இதோ உம் சித்தம் நிறைவேற்ற...

 

இதோ உம் சித்தம் நிறைவேற்ற...

வெனான்சியூஸ் CMF




 

திருவிவிலியத்தில் பல நபர்கள் பல அனுபவங்கள் ஊடாக கடவுளின் மகிமையையும் மாட்சியையும் எடுத்துரைத்து அவருக்குப் புகழ்பா பண்ணிசைத்து அவர்கள் தங்களுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துகிறார்கள்.

குறிப்பாக பழைய ஏற்பாட்டு நூல்களில் திருப்பாடல்கள் மிகவும் அழகாக கடவுளை போற்றி புகழ்ந்து அவரின் நல்ல செயல்களுக்காக நன்றி கூறுவதாக அமைகின்றது. அதே போன்று புதிய ஏற்பாட்டில் குறிப்பாக லூக்கா நற்செய்தியில் செக்கரியா தொடங்கி சிமியோன், முடக்கு வாத நோயிலிருந்து குணமடைந்தவர்நைன் ஊர் கைம்பெணிண் மகன் உயிர் பெற்றதைக் கண்டு மக்கள் கூட்டம், 18 ஆண்டுகளாக நிமிர முடியாத கூன் விழுந்த நிலையில் இருந்த பெண், எரிக்கோவில் பார்வை பெற்ற மனிதனோடு சேர்ந்து இருந்த மக்கள் கூட்டம் என இறைவனைப் புகழ்ந்து அவர் மகிமையை போற்றிப் பாடிய மக்கள் கூட்டத்தோடு இறைவமகனை ஈன்றெடுக்க பாக்கியம் பெற்ற அன்னை மரியாளும் இணைகின்றார்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. என்ற திருப்பாடலுக்கு ஏற்ப ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் அவர் மாட்சியையும் அவர் வல்ல செயல்களையும் அனைத்துலகும் அறிந்து கொள்ள செய்கிறார். குறிப்பாக தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வு அன்னை மரியாள் கடவுளின் வார்த்தையைத் தம் உதரத்தில் கருவாக ஏற்று இயேசுவை உலகுக்கு அளித்தார் என்ற உண்மையை எமக்கு வெளிப்படுத்துகிறது. மற்றும் அன்னை மரியாள் தன் சொந்தக் கதையைச் சொல்கிறாள்: சிறிய அற்பமான பெண்ணுக்கு கடவுள் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார் என்றும் கடவுள் கருணையும் இரக்கமும் உள்ளவர் மற்றும் கடவுள் உண்மையுள்ளவர் என்றும் அன்னை மரியாள் மீண்டும் மீண்டும் கூறுகிறார், முழு பாடலும் இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அன்னை மரியாள் கடவுளை போற்றி புகழ்ந்து பாடியுள்ளார்.

லூக்கா நற்செய்தி 1:47 இல் அன்னை மரியாள் ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது, என தொடங்கும் தன்னுடைய வாழ்த்துப்பா மூலமாக கடவுளின் தூய்மையையும், அவருடைய வல்லமையையும், அவருடைய பெருமையையும், அவருடைய இரக்கத்தையும், அவருடைய அன்பையும் இன்னும் அவருடைய பல்வேறுபட்ட இறைத்தன்மையை எடுத்துக்கூறி தந்தையின் திருவுளம் தன்னூடாக நிறைவேற தன்னையே முழுமையாக கடவுளிடம் ஒப்புக் கொடுக்கிறார். இவ்வாறு தன்னை முழுவதுமாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த அன்னை மரியாள் தன் திருமகன் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து கடவுளை எல்லா சூழ்நிலையிலும் போற்றி புகழ்ந்தேத்துவதை திருவிவிலியத்தினூடகவும் மற்றும் வரலாற்று பதிவுகள் ஊடாகவும் உணரமுடிகிறது.

குறிப்பாக தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த மற்றும் அவர் கடவுளின் வல்ல செயல்களை எடுத்துக் கூறிய நிகழ்வும் அன்னை மரியாள் எவ்வாறு கடவுளின் திட்டத்தை நிறைவேற்ற தன்னை முழுமையாக தயார் செய்தார் என்பது புலனாகிறது. எல்லா சூழ்நிலையிலும் அன்னை மரியாள் எவ்வாறு கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்பதை சற்று சிந்திக்கும்போது, வலுவிழந்து நிற்கும் மானிட சமூகத்திற்கு ஒரு வலிமையூட்டும் கருவியாக அன்னை மரியாள் விளங்குகிறாள். கபிரியேல் தூதர் வழியாக இயேசுவைப் பற்றி கூறிய வார்த்தைகள் அவர் பொருட்டு அன்னை பெற்ற அனுபவங்கள் மரனிதத்துவத்தில் அன்னையின் புகழ் ஓங்க காரணமாக அமைகிறது.

இயேசுவின் பிறப்பை கபிரியேல் தூதர் முன்னறிவித்த போது சொன்ன வார்த்தைகள் "அவர் பெரியவராய் இருப்பார், உன்னத கடவுளின் மகன் எனப்படுவார், தாவீதின் அரியணையை பெறுவார் அவரது ஆட்சிக்கு முடிவே இராது. ஆனால் அன்னை மரியாள் தூய ஆவியால் கருவுற்றது தொடங்கி இயேசுவை பெற்றெடுக்க இல்லிடம். இல்லாமல் இருந்த போதிலும், வானதூதர் கனவில் தோன்றி குழந்தை இயேசுவை ஏரோது கொல்ல தேடுகிறான் குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பியோட சொன்ன போதும், அன்று அவமானத்தின் சின்னமாக விளங்குகிய கொடூரமான கனம் தாங்கிய சிலுவை மரத்தை தன் சுமக்கும் போதும், பல கயவர் கூட்டம் எள்ளி நகையாடி அவரை தூற்றும் போதும், களுமரத்தில் அத்தனை துன்பங்களையும் தன் மகன் அனுபவிக்கும் போதும் இறைவனின் திட்டத்திற்கு அடிபணியும் வகையில் தாய்க்குரிய எல்லா சோதனைகளையும்வேதனைகளையும் மற்றும் பல சொல்லில் அடக்க முடியாத துன்பங்களையும் தன்னகத்தே ஏற்று கடவுளை எல்லா சூழ்நிலையிலும் கடவுளை மகிமை படுத்துகிற பணியில் அன்னை மரியாள் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து பஙகெடுக்கின்றாள்.

இத்தகைய மான்பும், மகிமையும் சாந்த குணமும் ஆறுதலுமான அன்னையை நாமும் எம் அன்னையாக பெற பாக்கியம் பெற்றிருக்கிறோம். அந்த அன்னையின் மாதிரியான வாழ்வை முன்னிறுத்தி கடவுளை எல்லா வேளையிலும் போற்றி புகழ்ந்து அவர் மகிமையை உலகிற்கு பறைசாற்றும் சாட்சிகளாக நாம் உருமாறுவோம்.

அன்னை மரியாள் இறைவனால் நமக்குக்கொடுக்கப்பட்ட உயர்ந்த கொடை. அவளுடைய வாழ்வு நமக்கெல்லாம் மிகச்சிறந்த பாடம். அன்னையின் வழிகாட்டுதலில் நாம் நடந்தாலே, அது நமக்கு இறைஆசீரைப்பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. அன்னையின் அன்புக்கரங்களில் நம்மை ஒப்படைத்து, இயேசுவோடு இணைந்து வாழ்வோம்.

Post a Comment

0 Comments