Header Ads Widget

Responsive Advertisement

யார் இந்த தூய ஆவியானவர்?

தாம் இவ்வுலகில் ஆற்றி வந்த மீட்புப் பணி உலக முடிவு வரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கிறிஸ்து விரும்பினார். எனவே, தமக்குப் பின் இப்பணி தொடர்ந்து நடைபெறத் தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தார். அதன்படி தாம் விண்ணகம் சென்ற பத்தாம் நாள் தூய ஆவியாரை அனுப்பினார். தூய ஆவியாரைப் பெற்றுக் கொண்ட திருத்தூதர்கள் அச்சம் இன்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தனர். அதற்குச் செவிகொடுத்த பல ஆயிரக்கணக்கான மக்கள் மனந்திரும்பித் திருமுழுக்குப் பெற்றார்கள். இவ்வாறு திரு அவை பிறந்து வளரத் தொடங்கியது.

தூய ஆவியார் யார்??

தந்தையோடும் மகனோடும் ஒரே கடவுளாக ஒன்றுபட்டு இருக்கும் மூன்றாம் ஆள்.

 தூய ஆவியார் திருச்சபையில் எவ்விதம் செயலாற்றுகிறார்??

உடலுக்குள் உயிர் இருப்பது போல், தூய ஆவியார் திரு அவையில் இருந்து, அதனை வழிநடத்துகிறார்; அதைப் புனிதப்படுத்தி வளரச் செய்கிறார்.

நம் ஒவ்வொருவரிடத்திலும் தூய ஆவியார் என்ன செய்கிறார்??

தூய ஆவியார் நம்முள் குடிகொண்டு நம்மைப் புனிதப்படுத்துகிறார். தந்தையோடும் மகனோடும் நம்மை இணைக்கிறார். இறைவனின் பிள்ளைகளுக்கு உரிய அன்புறவுடனும் சுதந்திரத்துடனும் நாம் வாழ நமக்கு ஆற்றல் அளிக்கிறார்.

தூய ஆவியார் மீது நமக்குள்ள கடமை என்ன?

தூய ஆவியாருடைய தூண்டுதல்களுக்குப் பணிந்து, அவர்மீது அன்பு கொண்டு, அவரது வழிநடத்துதலுக்கு ஏற்ப நாம் வாழ வேண்டும்.

தூய ஆவியாரின் கனிகள் யாவை?

தூய ஆவியார் அருளும் கனிகள் பன்னிரண்டு. அவை: அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம், பணிவு நயம், தாராள குணம், நிறை கற்பு என்பவை ஆகும். கலாத்தியர் (5:22-23)

தூய ஆவியாரின் கொடைகள் யாவை?

தூய ஆவியார் அருளும் கொடைகள் ஏழு. அவை: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், நுண்மதி, ஆற்றல், இறைப்பற்று, இறையச்சம் என்பவை ஆகும்.

தூய ஆவியாரின் வரங்கள் யாவை?

தூய ஆவியார் அருளும் வரங்கள் ஒன்பது. அவை: ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவு செறிந்த சொல்வளம், இறை நம்பிக்கை, பிணிதீர்க்கும் அருள் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல், பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல், பரவசப் பேச்சை விளக்கும் ஆற்றல் என்பவை ஆகும்.

தூய ஆவியாரின் அடையாளங்கள் யாவை?

தூய ஆவியாரின் அடையாளங்கள்:
நீர், அருட்பொழிவு, நெருப்பு, மேகம், நெருப்பு, மின்னல், புறா, காற்று என்பவை ஆகும்

Post a Comment

0 Comments