மரியா எலிசபெத்து சந்திப்பு விழா
31.05.2021.
அன்னையாம் திருஅவையானது வைகாசி (மே) 31ஆம் நாளை மரியா எலிசபெத்தை சந்தித்த விழாவாகக் கொண்டாடுகின்றது. இதுவொரு விவிலியப் பின்னணியினைக் கொண்ட விழாவாகும் (காண்க. லூக்கா 1:39-45). திருஅவையின் மரபின்படி மரியா வணக்க மாத நிறைவு நாளுமாகும்.
மடுமாதா திருத்தலத்திலுள்ள இரண்டு பிரதான திருவிழாக்கள் முறையே ஆடித் திருவிழா, ஆவணித் திருவிழாவாகும். ஆவணித் திருவிழா 15ஆம் நாளில் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவுடன் சிறப்பிக்கப்படுகிறது. ஆனால் ஆடித் திருவிழாவானது 2ஆம் நாளில் எந்தவொரு மரியாவின் விழாவுமின்றி இன்றுவரையிலும் சிறப்பிக்கப்படுகிறது. அதற்கான காரணத்தைத்தேடி செல்லுகின்றபோது நமக்குக் கிடைக்கும் விடை யாதெனில், மரியா எலிசபெத்தைச் சந்தித்த விழாவானது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பிற்பாடு 1969ஆம் ஆண்டில் நிகழ்ந்த திருவழிபாட்டு சீர்திருத்தத்தின்படி வைகாசி மாதம் 31ஆம் நாளுக்கு மாற்றப்பட்டது. அதாவது இன்று நாம் கொண்டாடுகின்ற தினத்திற்கு மாற்றப்பட்டது. அதுவரையிலும் ஆடி மாதம் 2ஆம் திகதியே இவ்விழா சிறப்பிக்கப்பட்டது. அவ்வழக்கமானது 1263 – 1969 வரையிலுமான எட்டு நூற்றாண்டுகள் தொடரப்பட்டது.
ஆனாலும் ஆனி மாதம் 24ஆம் நாள் வருகின்ற திருமுழுக்கு யோவானின் பிறப்பின் பிற்பாடு மரியா எலிசபெத்தினைச் சந்தித்த விழாவினை சிறப்பிப்பது பொருத்தமற்றது என்று திருஅவை கருதியதால், வைகாசி 31ஆம் நாளில் சிறப்பிக்கப்பட்ட அரசியான புனித கன்னி மரியா விழாவினை ஆவணி 22ஆம் நாளுக்கு மாற்றி, ஆடி 2ஆம் நாளில் சிறப்பிக்கப்பட்ட மரியா எலிபபெத்தினை சந்தித்த விழாவினை வைகாசி 31ஆம் நாளுக்கு முன்நகர்த்தி 1969ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறது. ஆயினும் இன்றும் ஆடி 2ஆம் நாளில் வழிபாட்டு நாட்காட்டியில் எந்தவொரு மரியாவின் திருவிழா இல்லாவிட்டாலும், பாரம்பரியமாக மடுமாதா திருத்தலம் விழாக்கோலம் ப10ணுகிறது.
மரியா எலிசபெத்தைச் சந்தித்த விழாவுடன் இன்னும் மூன்று விழாக்கள் பின்னிப் பிணைந்துள்ளன. அவையாவன, ஆண்டவரின் பிறப்பின் அறிவிப்புப் பெருவிழா (மங்கள வார்த்தை விழா – பங்குனி 25ஆம் நாள்), திருமுழுக்கு யோவானின் பிறப்புப் பெருவிழா (ஆனி 24ஆம் நாள்), கிறிஸ்து பிறப்புப் பெருவிழா (நத்தார் விழா – மார்கழி 25ஆம் நாள்).
மரியாவுக்கு கபிரியேல் தூதரால் மங்கள வார்த்தை அறிவிக்கப்பட்ட பிற்பாடு, அவர் உடனடியாக தன் உறவினளாகிய முதிர்வயதில் கருவுற்றுள்ள எலிசபெத்தைச் சந்தித்து அவளுக்கு ஒத்தாசையாகயிருக்கப் புறப்படுகிறாள். தமிழர்களின் விழாவாகிய பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டதாக நான்கு கருப்பொருளில் சிறப்பிக்கப்படுகிறது. முதலில் பழையன கழிதலும்ää புதியன புகுதலுமென போகிப் பண்டிகையாகவும், சூரிய பகவானுக்கு நன்றிகூறி பொங்கல் பண்டிகையும், உழவர்களுக்கு உதவிடும் கால்நடைகளுக்கு நன்றிகூறி பட்டிப் பொங்கல் பண்டிகையும்ää இறுதியில் உறவுகளைச் சந்தித்து மகிழ்வுறு வண்ணம் காணும் பொங்கல் பண்டிகையும் சிறப்பிக்கப்படுகின்றன. இந்நாளில் சென்னை மரினாக் கடற்கரையில் கூடும் மக்கள் வெள்ளத்திற்கு அளவே கிடையாது.
பிரிந்தவர்கள் கூடினால் சொல்லவும் வேண்டுமா’ என்பதற்கொப்ப சந்திப்புக்கள் வாழ்வில் மகிழ்வினைக் கொணர்கின்றன. அத்தகைய ஒரு சந்திப்புத்தான் மரியாவும் எலிசபெத்தும் சந்தித்துக்கொண்ட சந்திப்பாகும். அங்கு சென்ற மரியாள் எலிசபெத்தினை அவரது மகப்பேற்றிக்காக வாழ்த்துகின்றாள். மரியாவைக் கண்ட ஆனந்தத்திலும், அவளது வாழ்த்துரையைக் கேட்ட மகிழ்ச்சியிலும் எலிசபெத்து ‘பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர், உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று’ என்கிறாள்.
ஆண்டவரின் தாயின் சந்திப்பு எலிசபெத்திற்கு வாழ்வில் ஆசீர்வாதத்தையும், வளத்தையும் முதுமையில் கருவுற்ற அவளுக்கு துணிவையும், தைரியத்தையும், மனவலிமையினையும் நல்கியது. ஏனெனில் விவிலியம் பகர்வதுபோன்று மரியாவின் சந்திப்பினால் எலிசபெத்தின் வயிற்றினுள் இருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளியது. அதே போன்றுதான் அன்னை மரியாவின் பிரசன்னம் அவரது பரிந்துரையினை நம்பி வாழ்கின்ற பிள்ளைகளுக்கு பெரும் ஆசீர்வாதமும், வரப்பிரசாதமுமாகும். தன்னை நம்பி கூவியழைக்கின்ற மாந்தர்களின் கண்ணீரெல்லாம் தன் மகனின் அருளால் துடைப்பவள் அம்மா மரியா. இக்கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அம்மா மரியாவின் பிள்ளைகள் நம்பிக்கையுடன் அவளை ஏறெடுப்போம். அவளும் நமது நம்பிக்கையுடன் கூடிய விண்ணப்பங்களுக்கு தம் மகன் இயேசுவிடத்தில் பரிந்துபேசி அருள் வரங்களை நிறைவாகப் பெற்றுத்தந்து அனைவரையும் அரவணைத்துப் பாதுகாப்பாள்.
மரியே வாழ்க! வாழ்க மரியே!
அருள்பணி அகஸ்தீன் நவரெத்தினம் (நவாஜி)
சிரேஷ்ட விரிவுரையாளர்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
31.05.2021


0 Comments