Header Ads Widget

Responsive Advertisement

ஒவ்வொரு செயலிலும் இறைவனின் மறைவான இருப்பு உள்ளது

 

வாழ்விலும், வரலாற்றிலும் எப்போதும் செயலாற்றும் இறைவனைக் கண்டுகொள்வதன் வழியாக, நமக்கு, முன்னோக்கிச் செல்லும் சக்தி கிட்டுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் மறைவான இருப்பு உள்ளது, அதனை கண்டுகொண்டு கவனமுடன் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 13ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகச் சிறியதாக இருக்கும் கடுகு விதை பெரிய மரமாகி, பறவைகளுக்கும் தங்குமிடமாவது பற்றி இயேசு கூறிய உவமையைச் சுட்டிக்காட்டி, இவ்வாறே கடவுளும் நம் வாழ்வில் செயலாற்றுகிறார் எனக் கூறினார்.

நாம் வாழும் இந்த அவசர உலகில், இறைவனின் செயல்பாடுகளை நாம் கண்டுகொள்ளாமல் போகும் ஆபத்து ஏற்படலாம், ஆனால், நம் நற்செயல்கள் ஒப்பீட்டு அளவில் சிறியதாக இருப்பினும், தாழ்ச்சியிலும், மறைவான நிலையிலும், நமக்கு புலப்படாத வகையில் வளர்ந்து பெரிதாகின்றன என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நன்மை சக்தியற்றது, தீமையே எப்போதும் வெல்லும் என்ற சோதனைகள் நம் வாழ்வில் ஏற்படும்போது, விதைகள் முளைத்தல் குறித்து இயேசு கூறும் உவமைகள், நமக்கு உறுதியான நம்பிக்கையை வழங்குபவைகளாக, இருக்கவேண்டும் என, விசுவாசிகளை நோக்கி அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் வாழ்வில் மறைந்திருக்கும் உண்மை நிலைகளைக் குறித்து கண்களைத் திறந்தவர்களாக, நம் வாழ்விலும், வரலாற்றிலும் எப்போதும் செயலாற்றும் இறைவனைக் கண்டுகொள்வதன் வழியாக நமக்கு முன்னோக்கிச் செல்லும் பலம் கிட்டுகிறது என்றுரைத்த திருத்தந்தை, நாம் கடவுளின் அரவணைப்பில் இருக்கிறோம் என்பதில் முழுநம்பிக்கைக் கொள்வது, நாம் இந்த பெருந்தொற்றிலிருந்து வெற்றியுடன் வெளியே வருவதற்கு உதவும் என மேலும் எடுத்துரைத்தார்.

நம்முடைய திட்டங்களையும், முயற்சிகளையும், செயல்படுத்த முனைகையில், இடையே வளரும் சந்தேகக் களைகளையும், விசுவாச நெருக்கடிகளையும் கண்டு சோர்வடையாமல் இருப்பதில் கவனமாக இருக்கவேண்டும், என அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புடனும், அர்ப்பணத்துடனும், பொறுமையுடனும், விதைகளை விதைப்பதே நம் கடமை, அவைகளை வளர வைப்பதை கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நமபிக்கையுடன் செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0 Comments