இறை சித்தத்தில் அன்னை மரியாள்...
Bro. வெனான்சியீஸ் CMF
அன்பார்ந்தவர்களே! திருவிவிலியத்தில் பல நபர்கள் பல அனுபவங்கள் ஊடாக கடவுளின் மகிமையையும் மாட்சியையும் எடுத்துரைத்து அவருக்கு புகழ்ப்பா பண்ணிசைத்து அவர்கள் தங்களுக்கும் கடவுளுக்கும் உள்ள தூய உறவை வெளிப்படுத்துகின்றார்கள். குறிப்பாக பழைய ஏற்பாட்டு நூல்களில் திருப்பாடல்கள் மிகவும் அழகாக கடவுளைப் போற்றி புகழ்ந்து அவரின் வல்ல செயல்களுக்காக நன்றி கூறுகின்றனவாக அமைகின்றது. அதே போன்று புதிய ஏற்பாட்டில் குறிப்பாக லூக்கா நற்செய்தியில் செக்கரியா தொடங்கி சிமியோன், முடக்குவாத நோயினின்று குணமடைந்ந்தவர், நயீம் ஊர் கைம்பெண்ணின் மகன் உயிர் பெற்றதைக் கண்ட மக்கள் கூட்டம், பதினெட்டு ஆண்டுகளாக நிமிர முடியாது கூன் விழுந்த நிலையில் இருந்த பெண், எரிக்கோவில் பார்வை பெற்ற மனிதனோடு சேர்ந்து இருந்த மக்கள் கூட்டம் என இறைவனைப் புகழ்ந்து அவர் மகிமையைப் போற்றிப் பாடிய மக்கள் கூட்டத்தோடு இறைமகனை ஈன்றெடுக்க பாக்கியம் பெற்ற அன்னை மரியாளும் இணைகின்றார்.
லூக்கா நற்செய்தி 1:47 ல் அன்னை மரியாள் "ஆண்டவரை எனது உள்ளம் போற்றி பெருமைப் படுத்துகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது". எனத் தொடங்கும் தன்னுடைய வாழ்த்துப்பா மூலமாக கடவுளின் தூய்மையையும் அவருடைய வல்லமையையும், அவருடைய வலிமையையும், அவருடைய இரக்கத்தையும் அவருடைய அன்பையும் இன்னும் அவருடைய பல்வேறுபட்ட இறை தன்மையையும் எடுத்துக் கூறி தந்தையின் திருவுளும் தன்னூடாக நிறைவேற தன்னையே முழுமையாக கடவுளிடம் ஒப்புக் கொடுக்கிறார்.
இவ்வாறு தன்னையே முழுவதுமாக கடவுளுக்கு ஒப்புக் கொடுத்த அன்னை மரியாள் தன் திருமகன் இயேசுக் கிறிஸ்துவோடு இணைந்து கடவுளை எல்லா சூழ்நிலையிலும் போற்றிப் புகழ்ந்தேத்துவதுவதை திருவிவிலியத்தின் ஊடாகவும் வரலாற்றுப் பதிவுகளின் ஊடாகவும் உணர முடிகிறது. எல்லாச் சூழ்நிலையிலும் அன்னை மரியாள் எவ்வாறு கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்பதையும் சற்று சிந்திக்கும் போது வலுவிழந்து நிற்கும் மானிட சமூகத்திற்கு ஒரு வலிமையூட்டும் கருவியாக அன்னை மரியாள் விளங்குகிறாள். கபிரியேல் வானதூதர் இயேவைப் பற்றி கூறிய வார்த்தைகள் அவர் பொருட்டு அன்னை பெற்ற அனுபவங்கள் மனிதத்துவத்தில் அன்னையின் புகழ் ஓங்க காரணமாக அமைகிறது.
இயேசுவின் பிறப்பை கபிரியேல் வானதூதர் முன்னறிவித்த போது சொன்ன வார்த்தைகள் "அவர் பெரியவராய் இருப்பார் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார், தாவீதின் அரியணையை பெறுவார், அவரது ஆட்சிக்கு முடிவே இராது". ஆனால் அன்னை தூய ஆவியினால் கருவுற்றது தொடங்கி இயேசுவைப் பெற்றெடுக்க இல்லிடம் இல்லாமல் இருந்த போதும் வானதூதர் கனவில் தோன்றி குழந்தை இயேசுவை ஏரோது கொல்லத் தேடுகிறான் குழந்தையையும் அதன் தாயையும் எகிப்துக்கு தப்பி ஓடிச் செல்லச் சொன்ன போதும் அன்று அவமானத்தின் சின்னமாக விளங்கிய கொடூரமான கனம் தாங்கிய சிலுவை மரத்தை தன் மகன் சுமந்த போதும் பல கயவர் கூட்டம் தன் மகனை எள்ளி நகையாடி அவரைத் தூற்றும் போதும் களுமரத்தின் அத்தனை துன்பங்களையும் தன் மகன் அனுபவிக்கும் போதும் இறைவனின் சித்தத்திற்கு அடிபணியும் வகையில் எல்லா வகையான சோதனைகளையும் வேதனைகளையும் துன்பியல் நிகழ்வுகளையும் தன்னத்தே ஏற்று கடவுளை எல்லா சூழ்நிலையிலும் மகிமைப்படுத்துகின்ற பணியில் அன்னை மரியாள் இயேசுக் கிறிஸ்துவோடு சேர்ந்து பங்கெடுக்கின்றாள்.
இத்தகைய மாண்பும் மகிமையும் சாந்த குணமும் ஆறுதலுமான அன்னையை நாமும் எம் அன்னையாகப் பெற பாக்கியம் பெற்றிருக்கின்றோம். அந்த அன்னையின் வழிநின்று கடவுளை எல்லா வேளையிலும் போற்றிப் புகழ்ந்து அவர் மகிமையையை உலகிற்கு பறைசாற்றும் சாட்சிகளாக நாம் உருமாறுவோம்.


0 Comments