Header Ads Widget

Responsive Advertisement

நற்கருணை – கிறிஸ்தவ ஒன்றிப்பின் அருளடையாளம் - Fr. நவாஜி (அகஸ்தீன் நவரெத்தினம்)

 நற்கருணை – கிறிஸ்தவ ஒன்றிப்பின் அருளடையாளம்



கடந்த 2020 ஆண்டில் அன்னையாம் திருஅவை 52வது உலகளாவிய நற்கருணை மாநாட்டினை ஐரோப்பாவின் ஹங்கேரி நாட்டில் புரட்;டாதி மாதத்தில் ஒழுங்கு செய்திருந்தது. அது உலகளாவிய ‘கொவிட் 19’ தொற்றுப்பரவல் காரணமாக 2021ஆம் ஆண்டு அதே காலப்பகுதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. நற்கருணை குறித்த அளவுக்கதிமான மறையுரைகளைக் கேட்டுள்ளோம். கட்டுரைகளை பத்திரிகைளிலும், புத்தகங்களிலும் படித்திருக்கின்றோம். உதாரணமாக, நற்கருணை ஆன்மீக அருளடையாளம், தியாக வாழ்வின் சின்னம், பகிர்வின் சின்னம், ஒற்றுமையின் சின்னம், அன்பின் அருளடையாளம், வாழ்வு தரும் உணவு என ஏராளம், அடிக்கிக்கொண்டே செல்லலாம். 

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு குருவானவர் பொதுநிலையினரால் எழுதப்பட்ட சில கட்டுரைகளை என்னிடம் கொடுத்து இவற்றைத் திருத்தி மதிப்பிட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டார். அக்கட்டுரைகளை மதிப்பீடு செய்வதற்காக வாசித்தபோது அவற்றுள் ஒரு கட்டுரையாளர் ‘குருக்கள் புனிதர்களின் நவநாள்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை நற்கருணைக்கு கொடுத்து, நற்கருணை பக்தியை வளர்க்கலாமே’ என்று எழுதியிருந்தார். இதனூடாக அவர் என்ன எதிர்பார்க்கின்றார் என்று சிந்தித்தவனாக இதனை மையப்படுத்தி ஓர் ஆலயத்தில் நான் ஆற்றிய மறையுரையின் தொடர்ச்சிதான் இவ்விரிவான ஆய்வுக் கட்டுரையாகும். 

திருஅவைகளில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அருளடையாளமாக திருமுழுக்கு திகழ்கின்றது. அதற்கு அடுத்த நிலையில் பெரும்பாலான மரபு வழி வருகின்ற திருஅவைகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அருளடையாளம் நற்கருணையாகும். இன்னும் சொல்லப் போனால் வேறு அருளடையாளங்களை ஓரிரண்டு பேர்களைத்தவிர ஏனையோர் ஏற்றுக்கொள்வதில்லை. அதேவேளையில் நற்கருணை குறித்த நம்பிக்கையும் திருஅவைக்கு திருஅவை வேறுபடுகின்றது. ஏன் திருஅவைகளுக்கு இடையில் நற்கருணை குறித்த இவ்வாறான மாறுபட்ட நம்பிக்கைள் காணப்படுகின்றன, ஒன்றிப்பின் அருளடையாளமாகிய நற்கருணை குறித்து இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒன்றிப்பு முயற்சிகள் யாவை என்பவை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

நாம் வாழ்கின்ற 21ஆம் நூற்றாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கிறிஸ்தவ திருஅவைகளின் ஒன்றிப்பு குறித்து பேசப்படுகின்றது. ஒன்றிப்பிற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2ஆம் வத்திக்கான பேரவைகூட கிறிஸ்தவ திருஅவைகளுக்கிடையில் ஒன்றிப்பினை ஏற்படுத்தும் நோக்கில் ‘கிறிஸ்தவ ஒன்றிப்பு’ என்கிற விதித்தொகுப்பினையும் தந்துள்ளது. நவீன கால முதல் சீர்திருத்த இறையியலாளர் என்று கொள்ளப்படுகின்ற மாட்டீன் லூத்தர் கத்தோலிக்க திருஅவையிலிருந்து விலகி லூத்தரன் திருஅவையினை உருவாக்கியதன் 500 ஆண்டுகள் நிறைவினை 2017ஆம் ஆண்டில் நினைவு கூரப்பட்டது (1517 – 2017). ஆயினும் இந்த 500 ஆண்டுகளின் இறுதியில் பல ஒன்றிப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் இவ்விரு திருஅவைகளின் ஒன்றிப்புக்காக Conflict to Communion (விரிசலிருந்து வாழ்வுக்கு, பகைமையிலிருந்து பரஸ்பரத்திற்கு) என்கிற அழகான மடல் வெளியீடு செய்யப்பட்டது. இவ்வாறு பலவழிகளில் ஒன்றிப்பு முயற்சிகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன. 

இத்தகைய பின்னணியில் நற்கருணை இறையியல் குறித்து சீர்திருத்த இறையியலாளர்கள் (சுநகழசஅளைவள) கூறுவது என்ன? அவர்களுக்கு கத்தோலிக்க திருஅவை அளிக்கும் பதில் என்னவென்று சிந்திப்போம். சீர்திருத்த இறையியலாளர்களின் இறையியலானது மூன்று சிறப்புக்களை உள்ளடக்கியதாக மையப்படுத்தப்பட்டுள்ளது. அவையாவனää

1. விவிலியம் மட்டும் - Sola Scriptura

2. நம்பிக்கை மட்டும் - Sola fide

3. அருள் மட்டும் - Sola gratia

அதனடிப்படையின் கத்தோலிக்க திருஅவையின் அருளடையாள இறையியலை, அதாவது ‘அருளடையாளங்கள் மீட்பின் கருவிகள்’ எனும் கருத்தை எதிர்த்தார்கள். அதனை கேள்விக்கு உட்படுத்தினார்கள். இவர்களுக்கு பதில் கொடுக்கும் வண்ணம் கத்தோலிக்க திருஅவையில் 16ஆம் நூற்றாண்டில் ‘திரிதெந்தீன் பொதுச்சங்ம்’ (1545 – 1563) கூட்டப்பட்டது. சங்கம் என்ன சொன்னது என்பதற்கு முன்னதாக, சீர்திருத்த இறையியலாளர்கள் நற்கருணை குறித்து என்ன கூறினார்கள் என்று நோக்குவது சாலச் சிறந்ததாகும். 

சீர்திருத்த இறையியலாளர்களுள் முதன்மையானவர் மாட்டின் லூத்தர் (Martin Luther). இவர் ஜேர்மனி நாட்டைச் சார்ந்தவர். அகுஸ்தீனியன் துறவற சபையில் இணைந்து கத்தோலிக்க குருவாகப் பணியாற்றியவர்,, மிகச்சிறந்த அறிவாளியும், இறையியலாளரும்கூட. இவர் நற்கருணை குறித்த கத்தோலிக்க திருஅவையின் போதனையில் இடறல்பட்டார். இவர் 1520ஆம் ஆண்டில் இலத்தீன் மொழியில் De captivitate Babilonica Ecclesiae (The Babilonian Captivity of the Church) எனும் நூலில் கத்தோலிக்க திருஅவையின் நற்கருணைப் போதனையானது மூன்று வழிகளில் சிறைப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார். அவையாவன முறையே, கிறிஸ்துவின் திருஇரத்தத்தினை பொதுநிலையினருக்கு தர மறுக்கின்றது, இரண்டாவதாக, ‘திருப்பலியில் குருவானவரின் வசீகர வார்த்தைகளினால் அப்பமும், இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் (Transsubstantiation) மாறுகிறது.’ இது பொருண்மை மாற்றம் (உட்பருப்பொருள் மாற்றம்) எனப்படுகிறது. இதனை லூத்தர் மறுத்தார். அவரது போதனைப்படி, ‘நற்கருணையில் இயேசு வீற்றிருக்கின்றார். ஆனாலும் இயேசுவின் உடலும், இரத்தமும் அப்பமும், இரசமும் இணைந்தே வீற்றிருக்கின்றன (Consubstantiation)  அப்பம் இரசம், உடல் இரத்தமாக மாறுவது என்கிற பொருண்மை மாற்றத்தினை ஏற்க உடன்படவில்லை. மூன்றவதாக நற்கருணை ‘பலி’ (Sacrifice) என்கிற கருத்தினையும் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக நற்கருணை விருந்து ‘நினைவு’ (Anamnesis) என்பதை மாத்திரமே ஏற்றுக்கொண்டார்.

பிலிப் மெலாங்டன் (Philip Melanchthon) லூத்தரைப் பின்பற்றிய இன்னுமொரு சீர்திருத்தவாதி. இவர் ஓர் முறையான இறையியலாளர் (Systematic Theologian). இவரது போதனைப்படி ‘நற்கருணையின் நோக்கம் இயேசுவை உணவாக உண்பதற்காவே கொடுக்கப்பட்டது. அதிலே அவர் பிரசன்னமாய் உள்ளார். நற்கருணை விருந்துக்கு பிற்பாடு அதில் அவரது பிரசன்னம் கிடையாது. அதனால் நற்கருணையை நற்கருணைப் பேழையில் வைத்துப் பேணுவதில் பொருளில்லை’ என்கிறார்.

சுவிஸ்லாந்தின் நாட்டின் உல்றிச் சுவிங்கிளி (Ulrich Zwinglin) லூத்தரை வழியொற்றிய சீர்திருத்த இறையியலாளர். அவரும் ‘நற்கருணை பலி அல்ல, மாறாக, நற்கருணை விசுவாசத்தின் வெறும் வெளி அடையாளமே. இது இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்தைத் குறித்து நிற்கும் வெறும் பிரதிநிதித்துவம் (Representation) மட்டுமே. நற்கருணையில் கிறிஸ்துவின் பிரசன்னம் ஓர் அடையாளப் பிரசன்னமே’ என்கிறார்.

அடுத்து நமது கவனத்திற்குரிய சீர்திருத்த இறையியலாளர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஜோன் கல்வின் (John Calvin) இவர் தமது போதனையின் வாயிலாக லூத்தருக்கும் சுவிங்கிளிக்கும் இடையில் ஓர் நடுவழியினை நிறுவ முயன்றார். இவரும் லூத்தரைப் போன்று நற்கருணை பலி என்பதனை மறுத்தார். அதற்கு மேலாக அப்ப, இரச பொருண்மை மாற்றமாகிய கிறிஸ்துவி;ன் உடல், இரத்தம் என்பதனை அடியோடு மறுத்தார். இவரது போதனையின்படி ‘உயிர்த்த இயேசுவின் பிரசன்னம் விண்ணகத்திற்கு மட்டுமே உரித்தானது. அப்பிரசன்னம் ஏதொவொரு வகையில் உலகிலும் உள்ளது. அந்ந வகையில் நற்கருணையில் இருப்பது இயேசுவின் பிரசன்னம் அன்று மாறாகää அது அவரது சக்திஃவல்லமை’ என்றார்.

சீர்திருத்த இறையியலாளர்களின் கேள்விக்கு பதில் கொடுக்கும் வண்ணம் கத்தோலிக்க திருஅவையில் நடந்தேறியதே திரிதெந்தீன் பொதுச்சங்கமாகும். பொதுச்சங்கமானது சீர்திருத்த இறையியலாளர்களின் பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்தது, அவற்றுள் அருளடையாளங்களும் ஒன்றாகும். பொதுச்சங்கத்தின் நற்கருணை குறித்த கத்தோலிக்கத் திருஅவையின் போதனையானது மூன்று பிரதான விடயங்களை உள்ளடக்கியதாகும். இப்போதனைகள் மத்திய கால இறையியலாளர் புனித தோமஸ் அக்குனாவிஸ் (St. Thomas Aquinas) அவர்களின் நற்கருணை இறையியலை அடிப்படையாகக் கொண்டதாகும். அதனடிப்படையில்.

1. திருப்பலியில் காணிக்கையாக வழங்கப்படுகின்ற அப்பமும், இரசமும் நற்கருணை மன்றாட்டில் குருவானவரின் வசீகர வார்த்தைகளினால் இயேசுவே கூறியது போலவே அவரது உடலாகவும், இரத்தமாகவும் மாறுகின்றது. இதுவே பொருண்மை மாற்றம் (Transsubstantiation) எனப்படுகிறது. 

2. இவ்வாறு மாற்றப்பட்ட நற்கருணையில் இயேசுகிறிஸ்து உண்மையாக பிரசன்னமாக (Real Presence) இருக்கின்றார்.

3. நற்கருணை விருந்திற்கு பிற்பாடும் இயேசுகிறிஸ்துவின் நற்கருணைப் பிரசன்னமானது தொடர்கின்றது (Continuos Presence). அதனாற்தான் கத்தோலிக்க திருஅவையில் நற்கருணைப் பேழையில் வைத்து பாதுகாக்கப்படுவதும், நற்கருணை எழுந்தேற்ற ஆராதனைகள், ஆசீர்கள், திருமணித்தியாலங்கள்ää நற்கருணைச் சிற்றாலயங்கள் பல விடயங்கள் தொடர்கின்றன. 

நற்கருணையானது கிறிஸ்தவ ஒன்றிப்பின் மிகமுக்கிய அங்கமும், கிறிஸ்தவ ஒன்றிப்பின் அடையாளமுமாகும். ஆயினும் வரலாற்றில் நற்கருணை இறையியல் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு தடைக்கல்லாக அமைந்துள்ளது. சீர்திருத்தக் காலம் தொடக்கம் நற்கருணை குறித்த போதனையில் பல சர்ச்சைகள் எழந்துள்ளன. நற்கருணை குறித்த புரிதலில் இன்றுவரை இடைவெளி தொடர்கின்றது. நற்கருணை குறித்த போதனையில் திருஅவைகளுக்கிடையில்  குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருந்தபோதிலும்கூட BEM ஆவணம் (விபரம் கீழே தரப்பட்டுள்ளது) கிறிஸ்தவ ஒன்றிப்பு வரலாற்றில் மிக முக்கியமான மைற்கல்லாகும்.

 நற்கருணை குறித்த மாறுபட்ட போதனைகள் வரலாற்றில் தொடர்ந்தாலும்ää 20ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த சிந்தனையோட்டம் எல்லாத் திருஅவைகளிலும் ஆழமாக பரவியது. இதன் காரணமாக கிறிஸ்தவத் திருஅவைகள் மத்தியில் உலக கிறிஸ்தவ மாமன்றம் உருவாக்கப்பட்டது (World Counsel of Churches). அதன்கீழ் இயங்குகின்ற, அதற்கு முன் உருவாகிய நம்பிக்கையும் ஒழங்கும் அமைப்பு (Faith and Order) தனது நீண்டகால இறையியல் கற்கையின் நிறைவாக 1982ஆம் ஆண்டில் திருமுழுக்கு, நற்கருணை, திருப்பணி (Baptsm, Eucharist, Ministry) என்கிற BEM ஆவணத்தை கிறிஸ்தவ ஒன்றிப்பின் அடையாளமாக வெளியிட்டு பல்வேறுபட்ட திருஅவைகளின் கருத்துக்களை எதிர்பார்த்து நின்றது. அதனடிப்படையில் கிட்டத்தட்ட 200 அளவிலான திருஅவைகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். கத்தோலிக்கத் திருஅவையும் தனது கருத்துக்களை 1987ஆம் ஆண்டில் பகிர்ந்து கொண்டது. இக்கருத்துக்கள் யாவும் ஆறு பாகங்களாக தொகுக்கப்பட்டு 1988ஆம் ஆண்டில் Max Thurien என்கிற இறையியலாளரால் வெளியிடப்பட்டது. ஆவணத்தின் நற்கருணை குறித்த பகுதியில் நற்கருணை உருவாக்கம், நற்கருணையின் பொருள் (இறைத்தந்தைக்கான நன்றி, கிறிஸ்துவின் நினைவுகூரல், தூய ஆவியின் வேண்டுதல், இறைமக்களின் ஒன்றிப்பு, விண்ணரசின் உணவு), நற்கருணைக் கொண்டாட்டம் எனும் தலைப்புக்களில் பேசுகின்றது.

BEM ஆவணத்தின் 25வது ஆண்டு நிறைவில், 2007ஆம் ஆண்டில் கிறிஸ்தவ ஒன்றிப்பினை ஊக்குவிக்கும் பாப்பிறை ஆணைக்குழு (Pontifacal Comission for Promoting Christian Unity) இவ் ஆவணத்தைக் குறித்து குறிப்பிடும் போது, ‘கத்தோலிக்க திருஅவையின் நம்பிக்கைக்கும், புரிதலுக்கும், நடைமுறைக்கும் ஏற்ற வகையில் அநேகமான விடயங்கள் அமைந்துள்ளமையினைக் காண முடிகின்றது. ஆவணத்தின் கட்டமைப்பும், அடிப்படை விடயங்களின் ஒழங்கமைப்பும் நற்கருணை குறித்த கத்தோலிக்க போதனையுடன் ஒத்துள்ளது’ என்கிறது. 

திருத்தந்தை 2ஆம் ஜோன் பவுல் உலக கிறிஸ்தவ மாமன்றம் மற்றும் நம்பிக்கையும், ஓழங்கும் அமைப்பினைக் குறித்து பேசுகின்றபோது ‘கிறிஸ்தவ ஒன்றிப்பினை ஊக்குவிப்பதில் முக்கியமான பங்கினை தொடர்ந்து ஆற்றி வருகின்றது’ என புகழாராம் சூட்டுகின்றார். தொடர்ந்து கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த அவரது சுற்றுமடலாகிய Ut Unum sint (அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக) 1995இல் BEM ஆவணமானது வழிபாட்டினை அதிலும் சிறப்பாக நற்கருணை வழிபாட்டினை பல்வேறுபட்ட திருஅவைகளில், கத்தோலிக்க திருஅவையிலும் புதுப்பிக்கச் செய்து கிறிஸ்தவ ஒன்றிப்பினை நோக்கி நகர உதவியுள்ளது’ என்கிறார். திருஅவையானது 5ஆம், 11ஆம் நூற்றாண்டுகளில் இறையியல் சிக்கல்கள் காரணமாக பிளவுகளைச் சந்தித்தது. அவ்வாறே 16ஆம் நூற்றாண்டிலும் மேற்குத் திருஅவையில் பிளவுகள் உண்டாகின. ஆயினும் நம்பிக்கையும், ஒழங்கும் அமைப்பு தனது பலதரப்பட்ட உரையாடல்கள் வாயிலாக திருஅவைகளின் இணைவிற்காக வழியினை திறந்து வைத்துள்ளது. 

நற்கருணை குறித்து கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி நூல்: ‘நற்கருணை என்பது ஆண்டவர் இயேசுவின் உடல், இரத்தம் ஆகியவற்றின் பலியே ஆகும், தாம் மாட்சியோடு திரும்பி வரும்வரை, தமது சிலுவைப் பலியை எல்லாக் காலங்களிலும் நின்று நிலவச்செய்ய அவரே அதை ஏற்படுத்தினார். இவ்வாறு தம் இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை நினைவுகூர்ந்து கொண்டாடுவதைத் தம் திருஅவையிடம் ஒப்படைத்தார்’ என்று கற்பிக்கிறது (கதிம நூல் சுருக்கம், எண் 271). இதனாற்தான் கத்தோலிக்கத் திருஅவை நற்கருணைப் பலியினை திருப்பலியாக நாளாந்தம் தம் பணியாளர்கள் வாயிலாகச் சிறப்பிக்கின்றது. 

நற்கருணையில் இயேசுகிறிஸ்துவின் உயிருள்ள உண்மைப் பிரசன்னத்தை எம்மாவு சீடருடன் (ஒருவர் கிளயோப்பா அடுத்தவர் நாம் ஒவ்வொருவரும் தான்) நம்புவோம். எம்மாவுவில் (நற்கருணை நன்றிகூறிப் பகிரும் திருப்பலியில்) இயேசுவைச் சந்தித்து உறுதி பெறுவோம். சந்தித்து உறுதி பெற்றவரை ஜெருசலேமில் (நமது வாழ்வின் அனுதின நெருக்கடியான சூழ்நிலைகளில்) வாழ்வோம். நற்கருணை கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் அனைவரையும் கிறிஸ்தவ ஒன்றிப்பில் நகர்த்தட்டும். 

அருள்பணி அகஸ்தீன் நவரெத்தினம் (நவாஜி)

சிரேஷ்ட விரிவுரையாளர்,

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

ஆனி, 03. 2021


Post a Comment

0 Comments