அன்பு நெஞ்சங்களே!
உலகையே நிறுத்தி வைத்துள்ள இந்த கொரோனா தொற்றுநோய் எங்கள் வாழ்வின் அடிப்படைகளை சிந்திக்கவும் அதன் விழுமியங்களை சீர் சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் ஒரு அரிய வாய்ப்பைத் தந்திருக்கின்றது எனலாம். இன்று குடும்பங்கள் எனும் சமூகத்தின் அடிப்படை அலையினையும் அதனுடன் வரும் பொறுப்புகளையும் பற்றி ஒரு சில கருத்துகளை உங்கள் சிந்தனைக்கு முன் வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். குடும்பம் சமூகத்தை அமைக்கும் அடிப்படை அலகு மட்டுமல்ல அது ஒரு கோயில் போன்றது என்று நம் முன்னோர் எமக்கு கூறி வைத்துள்ளார்கள். குடும்பத்தில் தான் நாம் அன்பு செய்யப்படுகின்றோம், அன்பு செய்து வாழ அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை முதலில் கற்றுக்கொள்கின்றோம், அனுபவிக்கின்றோம். குடும்பத்தில் தான் நாம் முழு ஆளுமையில் வளர்ச்சி பெற முடியும் என்ற மனத்தைரியத்தை உணர்ந்து கொள்கின்றோம். குடும்பத்தில் தான் நாம் தனிமையானவர்கள் அல்ல தனி அடையாளம் கொண்ட சமூகப் பிராணிகள் என்பதைக் கற்றுக் கொள்கின்றோம். குடும்பத்தில் தான் நம் சமூகப் பொறுப்புக்களை ஏற்க நாம் தயாரிக்கப்படுகின்றோம். உதவியைப் பெறவும் உதவி செய்யவும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு வாழவும் நாம் பழகிக்கொள்கின்றோம். குடும்பத்தில் தான் நாம் ஒன்றுசேர்ந்து கடவுளைப் புகழவும் அவர் பாதம் சரணடையும் செய்கின்றோம். குடும்பத்தில் தான் வாழ்க்கை எல்லையற்ற எதிர்நோக்குகளை நமக்கு தந்து கொண்டிருக்கின்றது. வானமே நம் எதிர்நோக்கின் எல்லையாகும் என்பதையும் வரையறை செய்து கொள்கின்றோம்.
சமூக இடைவெளியைப் பேணும் இக்காலத்தில் ஊரடங்கு சட்டத்திற்குள் முடங்கிக்கொண்டிருக்கக்கூடிய இக்காலத்தில் குடும்பங்களின் நிலையைப் பற்றி ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் அன்டோனியோ கோ டியரஸ் ஒரு அறிக்கையினை சமர்ப்பித்தார். அவ்வறிக்கை குடும்பங்களுக்கு சவாலானது என்றே சொல்ல வேண்டும். இக்குறுகிய காலகட்டத்தில் வீட்டு வன்முறை நாற்பது சதவிகிதம் கூடியுள்ளதாகவும் குழந்தைகளின் நான்கு அடிப்படை உரிமைகள் கல்விக்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, உணவிற்கான உரிமை, உடல் நலத்திற்கான உரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமன்று, உலகையே ஒரு கிராமமாக மாற்றியுள்ள சமூக ஊடகங்கள் குறிப்பாக இணைய தளங்கள் மனித சமூகத்திற்கு செய்யக்கூடிய நன்மைகளுக்கப்பால் தீமையையும் செய்ய முடியும் என்றும் குறிப்பாக இளைய சமூகத்தினரும் நீண்ட மணி நேரங்களை இணைய வலைத்தளங்களில் செலவு செய்வது உடல் பசிக்கு இரை தேடும் பலர் பலிக்கடாக்களாக இவர்களை மாற்றுகின்றது என்று எச்சரிக்கை செய்து பெற்றோரும் சமூக ஊடக நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வீட்டுக்குள் முடங்கி விட்டோம் என்று சொல்வதை விட்டு விட்டு இப்பரிமாணங்களை புதுப்பிக்கும் காலமாக இது அமையட்டும். பொருள் தேடிய உலகில் பொருள் கொண்டு வாழ எங்களுக்கு கொடுக்கப்பட்ட காலமாக இது அமையட்டும் குடும்பத்திற்காகத் தானே பொருள் தேடினேன் என்பது உண்மையெனினும் ஆழ்ந்த பொருள் கொண்ட குடும்ப வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்பதன் மூலம் புதுப் படைப்பாக மாற இக்காலம் துணை செய்யட்டும்.
எனவே நாம் செய்ய வேண்டியது நம் நாட்களை ஒருவர் ஒருவருடன் உரையாடி ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். அறிவு ஆன்ம வளர்ச்சிக்கான நேரத்தையும், உடல் உள உறவு வளர்ச்சிக்கான நேரத்தையும் ஒழுங்கமைத்துக் கொள்வது அவசியமானது. படிப்பு, ஓய்வு, வலையத்தளம், தொலைக்காட்சிக்கான நேரம், குடும்ப நேரம், வேலை நேரம் அவற்றுடன் கூடியே சேர்ந்து செபிக்கின்ற நேரங்களை நாங்கள் நிர்ணயித்துக் கொள்வது அவசியமானது. குடும்பத்தை அன்பின் பாடசாலையாக, அறத்தின் அறிவாலயமாக, ஒற்றுமையின் இருப்பிடமாக, கடவுள் வாழும் இல்லமாக மாற்றுகின்ற போது உரிமைகள் பாதுகாக்கப் படும் என்பதில் சந்தேகம் இல்லை. எங்கள் குடும்பம் கோயிலாக இருக்கட்டும் அங்கு கடவுளைக் காணுவோம்.
நன்றி.
Fr. Callistus Joseph CMF


0 Comments