Header Ads Widget

Responsive Advertisement

அன்பில் கலந்த இரு உள்ளங்கள்...Sr. Resilda RMI

 அன்பில் கலந்த இரு உள்ளங்கள்...

Sr. Resilda RMI



அன்பானவர்களே!

கணவன் மனைவி உறவிலுள்ள ஒற்றுமையை ஆராய்ந்து பார்ப்போமானால் கணவன் மனைவியை அன்பு செய்து அவருக்காக அனைத்தையும் இழக்க தயாராக இருப்பதும் மனைவி கணவரை ஏற்றுக் கொண்டு தன்னையே முழுவதும் அர்ப்பணித்து வாழ்வதுமே கணவன் மனைவிக்கு இடையிலான உறவின் ஆணிவேராக அமைகிறது. 

           மரத்தை அறிவது கனியாலே, நன் மலரை அறிவது மணத்தாலே, செடியை அறிவது காயாலே, மண்ணின் செழிப்பை அறிவது வளத்தாலே,  மனிதனை அறிவது குணத்தாலே என்பது போல கணவனும் மனைவியும் தங்களுக்குள்ள உறவை  பலப்படுத்திக் கொள்ள புரிந்துணர்வு என்னும் நற்பண்பை தம்முடைய வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். 

            புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் அழகாகக் கூறுகின்றார். "இனி நீங்கள் இருவல்ல ஒருவரே" கணவனும் மனைவியும் ஒன்றை நினைத்து ஒன்றையே சிந்தித்து ஒன்றுக்காக பாடுபட்டு அந்த ஒன்றை உயர்த்தி அதனால் உயர்வடைவதே அவர்களுடைய  வாழ்க்கையின் மையப்பொருளாகும். எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கு மனைவிதான் ஒரு பெண்ணுக்கு கணவன் தான் அதற்கு இணை வேறு எதுவும் இல்லை. விழுதுகள் மரத்தை தாங்கலாம் ஆனால் வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும். அதைப் போல தான் கணவன் மனைவி உறவும். உணர்வுகளை மதித்து புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து குறைகளை அகற்றி நிறைவான முறையில் ஒரு புதிய வாழ்வை, புதிய குடும்பத்தை, புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை தான் வாழ்வின் உச்சக்கட்டம். எந்த ஒரு  உறவிலும் நம்பிக்கை மிகவும் முக்கியமானது. அதிலும் அன்பை பொருத்த வரையில் அதற்கு அடிப்படையாக இருப்பது நம்பிக்கை தான். 


              உளவியலாளர் "காட்திமையர்" John Major Cardi தன் கூற்றில் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவை 5 வகையான நல்ல ஆலோசனைகள் மூலம் விளக்கிக் கூறுகின்றார். 

எம் வாழ்வில் ஒற்றுமை, அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், தியாகவாழ்வு போன்ற நற்பண்புகளை வளர்த்து அதை வாழ்க்கை என்னும் பயணத்திலே பயணம் செய்ய ஒவ்வொரு நாளும் முயற்சி எடுக்க வேண்டும். பிழைகள் எழும் போது அவற்றை ஆரோக்கியமான முறையில் தீர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை மதித்து அவற்றை வாழ்க்கைப் பயணத்தில் கொண்டு வர வேண்டும். பிரச்சனையின் தீர்வே மனம் விட்டுப் பேசுவதாகும். எந்த வேளையிலும் மனக்கசப்போ அல்லது கோபமோ இல்லாமல் தேவைகளை தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசும்போது கணவன் மனைவிக்கான உறவு மேலும் வலுப்படுத்தப்படுகிறது. 

                மகிழ்ச்சியான உறவு என்பது இரண்டு நல்ல உள்ளங்களில் உருவாகும் மன்னிப்பு என்ற ஒன்றியமும் ஏற்றுக்கொள்ளுதலும் ஆகும். ஒருவருடைய கண்ணில் இருந்து கண்ணீர் வரும் போது இன்னொருவருடைய கண்ணில் இருந்து கண்ணீர் வந்தால் அந்த உறவை விட மிகப்பெரிய உறவு வேறு எதுவும் இல்லை. ஏனெனில் நம் ஒருவர்  ஒருவருடைய உறவை மட்டுமல்ல புரிந்து கொள்கின்றோம். மாறாக ஒருவர்  ஒருவருடைய உணர்வுகளையும் மதிக்கிறோம். நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காக்க வேண்டிய அவசியத்தை நினைத்துக் கொண்டால் மற்ற தேவையற்ற முறைப்பாடுகள் எழவே எழாது. 

                கணவன் மனைவிக்கிடையிலான உறவு வாழ்வு எப்போதும் மகிழ்ச்சியாக அமைய வேண்டும். அவர்களுடைய வாழ்வில் அன்பும் நம்பிக்கையும் மலர வேண்டும். அந்த அன்பும் நம்பிக்கையும் தான் அவர்களை கடைசி வரைக்கும் வாழவைக்கும். வெளிப்படையான உரையாடல், நல்ல வார்த்தைகளைக் கொண்டு கணவன் மனைவியை வாழ்த்துவதும் ஒருவருடைய தேவைகளை ஒருவர் புரிந்து உதவுவதும் குடும்ப வாழ்விற்கு முக்கியமானது. புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுகின்றார். "கணவர்களே உங்கள் மனைவியர்கள் மீது அன்பு காட்டுங்கள்: அப்படியே கிறிஸ்துவும் திருச்சபை மீது அன்பு கூர்கின்றார்."  மனிதனிடத்தில் எத்தனையோ குறைகள் கறைகள் இருந்த போதிலும் கிறிஸ்து அவர்களுக்காக தன் உயிரைக் கொடுத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். அதே போல கணவர் களும் மனைவியரிடத்தில் எவ்வகையான குறைகள் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் கிறிஸ்துவைப் போல் அன்பு கூர்பவர்களாக இருக்க வேண்டும். கணவனாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி குறைகளைப் பாராமல் நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைத் தனங்களையும் நினைத்து சமாதானமான நல்ல குடும்பத்தை நல்ல விழுமியங்களுடன் உருவாக்குவோம்.

Post a Comment

0 Comments