Header Ads Widget

Responsive Advertisement

கப்பல் பணியாளர்களின் உரிமைகள் மதிக்கப்பட

 

கப்பல்களில் பணியாற்றுவோரும் மனிதர்கள் என்பதை நினைவில் இருத்தி, இலாபத்தைவிட, மனித மாண்பின் அடிப்படையில், மனம், உடல், மற்றும், ஆன்மீக அளவில், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் ஆற்றப்படவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கப்பலில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கும் அதேவேளை, அவர்கள் தங்களின் மனம் தளர்ச்சியுற்ற நேரங்களில் சக்தியைப் பெறவும், பாதுகாப்பான கப்பல் பயணங்களை முடிக்கவும், பணி ஒப்பந்தக்காலம் முடிவுற்றபின், மகிழ்வோடு அவர்கள் தங்களின் குடும்பங்களோடு ஒன்றிணையவும் ஆண்டவர் அருள்புரியுமாறு மன்றாடுவோம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை 11, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், கடல் ஞாயிறுக்கென்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிச் சூழலிலும், கப்பல் பணியாளர்கள் தொடர்ந்து பணிகளை ஆற்றிவருகின்றனர் என்று கூறினார்.

உலக அளவில் நடைபெறும் வர்த்தகத்தில், ஏறத்தாழ 90 விழுக்காடு, கப்பல்கள் வழியாக இடம்பெறுகின்றது எனவும், 17 இலட்சம் பேர், கப்பல்களில் பணியாற்றுகின்றனர் எனவும் கூறியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், பெருந்தொற்றால், 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஏறத்தாழ நான்கு இலட்சம் பணியாளர்கள் கப்பலிலே இருக்கவேண்டிய சூழல் உருவானது என்றும், இவர்களில் சிலர் 18 மாதங்களாக இல்லங்களுக்குச் செல்ல இயலாமல் இருந்தனர் என்றும் கூறியுள்ளார்.

கப்பல்களில் பணியாற்றுவோரும் மனிதர்கள் என்பதை நினைவில் இருத்தி, இலாபத்தைவிட, மனித மாண்பின் அடிப்படையில், மனம், உடல், மற்றும், ஆன்மீக அளவில், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் ஆற்றப்படுமாறு, கப்பல் பணியாள்களைச் சேர்க்கும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், கர்தினால் டர்க்சன்.

கப்பல் பணியாளர்கள், கடல்களிலே கைவிடப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில், கடல்சார் தொழில் உலகளாவிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், இப்பணியாளர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெருந்துன்பமும், அவர்களின் குடும்பங்களைப் பாதிக்கின்றது என்பதையும் நினைவுபடுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments