Header Ads Widget

Responsive Advertisement

அன்னை மரியாளும் சமூக மாற்றமும் - Fr. Callistus Joseph CMF

அன்னை மரியாளும் சமூக மாற்றமும்

Fr. Callistus Joseph CMF

 


அன்பு நெஞ்சங்களே! கிறிஸ்தவ உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அங்கே அன்னை மரியாளின் மேல் பக்தியும், அதனுடன் கூடவே வரும் இறை திட்டத்தின் வெளிப்பாடுகளும் ஒருவரது கவனத்தை ஈர்க்காமல் இருக்க முடியாது. அண்மைக் காலத்திலே திருத்தந்தை பிரான்சிஸ் வழியாகவும் அன்னை மீது திரு அவை கொண்டுள்ள பக்தியும் அவளைப் பற்றிய கற்கைகளும் வெளிவந்த வண்ணமே உள்ளன. அன்னை மரியாளின் பக்தி குறைகின்ற இடங்களிலெல்லாம் இறைவிசுவாசம் கேள்விக்குள்ளாக்கப்படும் என இறையியலாளர் எச்சரித்துள்ளனர். எனவே அன்னை மரியாளை எட்டிய பக்தியும் நம் இறைவிசுவாசமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது என்பதை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். 


1974ம் ஆண்டு திருத்தந்தை 6ம் சின்னப்பர் எழுதிய மரியாளி சூல்டோஸ் என்னும் அப்போஸ்தலிக்கச் சுற்றுமடலில் திருச்சபையின் பக்தி முயற்சிகள் வேதாகமத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். இவ்வடிப்படையில் அன்னை மரியாளின் மேல் உள்ள  பக்தி முயற்விகளும் வேதாகம அடிப்படையில் சிந்திக்கப்பட வேண்டும் என்ற  அழைப்பினையும் திருத்தந்தை திருஅவைக்குக் கொடுத்துள்ளார். வேதாகமத்தில் அன்னையைப் பற்றிய பகுதிகள் மிகவும் குறைவானதாகவே இருப்பினும் அக்குறிப்புகள் நம் விசுவாச சமூக வாழ்வுக்கு முக்கியமான கருத்துக்களை நம் கண் முன் வைக்கின்றன. இன்று அப்படியான இரண்டு வேதாகமக் குறிப்புகளையும் அதன் அடிப்படையில் வரும் கற்கைகளையும் உங்கள் சிந்தனைக்கு முன்வைக்க விரும்புகின்றேன். 

யோவான் நற்செய்தி 2ம் அதிகாரம் 1 முதல் 12 வரையிலான இறை வசனங்களில் கானாவூர் திருமணத்தைப் பற்றியும் இயேசு தண்ணீரை இரசமாக்கிய அரும் அடையாளத்தைப் பற்றியும் நாம் வாசிக்கின்றோம். அன்றைய  யூத சமூகத்தில் திருமண விழாவானது 7 நாட்கள் கொண்டாடப்பட்டது. முதல் நாட்களில் உற்றார் உறவினரும் சமூகத்தில் பதவியில் இருப்போர் சிறப்பு விருந்தினர் பங்குபற்றுவதும் கடைசி நாட்களில் ஏழைகள்,  ஒதுக்கப்பட்டோர், பிச்சை எடுப்போர் பங்குபற்றுவதும் வழமையானது. சமூகத்தின் விழிப்பு நிலைகளில் இருப்போர்   எப்போதாவது ஒரு முறை மட்டுமே தங்களுக்குக் கிடைக்கும் திராட்சை மதுவை குடிக்க ஆர்வத்துடன்  வந்திருக்கும் இவர்களுக்கு அல்லவா இரசம் இல்லாது போயிற்று என்பது மரியாளின் கவலை. சமூகத்தின்  கடைநிலைகளில் இருப்பவர்களுக்கு இப்படி நடப்பதை அன்னை மரியாளால் பொறுக்க முடியவில்லை. எனவே தான் தன் மகனைப் பார்த்து இரசம் தீர்ந்து விட்டது என்று கூறி சிறந்த இரசத்தை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கின்றார். இந்த இரசம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ஏழை எளியவர்கள் சமூக கடைநிலைகளில் இருப்போர் மேல் கடவுளின் பார்வையும் அன்பும் பாதுகாப்பும் இருக்கின்றது என்ற இறைவாக்கினர் வழிவரும் மரபுச் செய்தியை நினைவு படுத்துகின்றது. இரசம் இல்லாமல் போவது இறை உடனிருப்பு இல்லாமல் போவதைக் குறிக்கின்றது என்கின்றார் இறையியலாளர் ஜீல் கில்மற். எனவே இரசம் தீர்ந்து விட்டது எனும் இரு சொற்களின் வழியாக ஒரு சமூக அமைவினையே அன்னை மரியாள் தன் மகனின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றாள்.  அடுத்து அங்கிருந்த பணியாளரிடத்தில் அவர் சொல்வதைச் செய்யுங்கள் எனச் சொல்லி இயேவின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் தான் கடவுளின் உடனிருப்பை உணரமுடியும் என்றும் அவரது இறையரசின் திட்டத்தில் பங்கு பெற முடியும் என்பதையும் நினைவுபடுத்துகின்றார். 

இதே சமூக கண்ணோட்டத்தையே லூக்கா நற்செய்தி 1ம் அதிகாரம் 46 முதல் 56 முடிய உள்ள திருவசனங்கள் மரியாளின் பாடல் மூலம் எமக்கு எடுத்துரைக்கின்றது. இம்மரியாளின் பாடலை புனித திருத்தந்தை 2ம் அருளப்பர் சின்னப்பர் ஏழைகளுக்கான நற்செய்தி எனக் கூறியுள்ளார். இப்பாடலில் மரியாள் உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதரடித்து வருகிறார் என ஒரு சமயப் புரட்சிக்கு வித்திடுகின்றார். வலியோரை அரியணையில் நின்று தூக்கி எறிந்துள்ளார் என ஒரு அரசியல் புரட்சியை தொடங்கி வைத்தார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார் செல்வரை வெறுங்கையராய் அனுப்பி விடுகின்றார் என ஒரு பொருளாதார புரட்சியை எதிர்வு கூர்கின்றார் அன்னை மரியாள். அன்னை அமைக்க விரும்பிய சமூகம்  ஒற்றுமை, நட்பு, பகிர்வு, கூட்டுறவு என்பவற்றை அடித்தளமாகக் கொண்டு ஆதிக்கம், சுரண்டல், சொத்துக்குவிக்கும் பலம் என்பவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு நேர்முரணானதாக இருப்பதை மனதில் கொள்ள வேண்டும். சமத்துவத்தைக் கொண்ட சமூகத்தை கடவுள் விரும்புகின்றார் என்பதை நினைவுத்துகின்றது மரியாளின் பாடல். அன்னை மரியாள் மீது பக்தி கொண்டு அன்னை மரியாளின் மாதம் இதுவல்லவோ எனப் பாடுகிறார்கள் அன்னையைப் போல ஏழை எளியவர் மீதும் சமுகத்தில் கடைநிலைகளில் இருப்போர் ஒதுக்கப்பட்டோர் மீதும்  நம் கண்களைத் திருப்ப வேண்டும். அவர்கள் மேல் தான் கடவுளின் பார்வையும் இயேசுவின் பார்வையும் இருக்கின்றது. எனவே மன்றாடுவோம். 

அன்புத்தாயே! உம்மைப் போன்று சமூக கடை நிலைகளில் இருப்பவர்களைக் கண்டு அவர்களுக்காக குரல் கொடுப்பவராகவும் ஒரு மாற்று சமூகத்தை சமத்துவ அடிப்படையில் அமைக்கும் கருவியாக திரு அவையை மாற்றும் என உம்மை மன்றாடுகின்றோம் ஆமென்

Post a Comment

0 Comments