மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
தாலிபான்களுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறும் மக்களுள் குறைந்தது இருபதாயிரம் பேருக்கு மனிதாபிமான முறையில் அடைக்கலம் அளிக்குமாறு, ஆஸ்திரேலிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Mark Coleridge அவர்கள், ஆஸ்திரேலிய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆகஸ்ட் 20, இவ்வெள்ளியன்று, ஆஸ்திரேலியப் பிரதமர் Scott Morrison அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பியுள்ள பேராயர் Coleridge அவர்கள், ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததிலிருந்து, அந்நாட்டு மக்கள் மீது பன்னாட்டளவில் அக்கறை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில், ஆப்கான் மக்களுள் எட்டாயிரத்திற்கு மேற்பட்டோருக்கும், தற்போது மூவாயிரம் பேருக்கும், ஆஸ்திரேலியா புகலிடம் அளித்துள்ளது, எனினும், இந்த உதவிக்கரம் அதிகரிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று, பேராயரின் மடல் கூறுகிறது.
ஆப்கான் மக்களை ஏற்பது குறித்து, முக்கிய மனிதாபிமான அமைப்புகளும், மற்ற நாடுகளும் உறுதியளித்துள்ளதன் அடிப்படையில், ஆஸ்திரேலியா, இன்னும் கூடுதலாக, 17,000 பேருக்கு இடமளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள பேராயர் Coleridge அவர்கள், அரசின் இந்நடவடிக்கைக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆதரவாகச் செயல்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

0 Comments