சுற்றுச்சூழலியம் !
ஓர் கிறீத்தவப் பார்வை.
பீ.வினோராச் CMF
அறிமுகம்
தாயகத்தின் கோடையையும் தமிழகத்தின் சுட்டெரிக்கும் கத்தரி வெய்யிலையும் கூட நான் கடந்து வந்திருக்கிறேன். கோடையும் சோழகமும் சோடியாக வருவதாலோ தெரியவில்லை, வெப்பம் ஒரு பொருட்டு என நான் கருதியதில்லை .ஆனால் ஐரோப்பாவில் இது எனக்கு முதல் கோடை. இங்கு குளிரை விட வெயிலெனும் போதுதான் வெளியிற்செல்ல தயங்கும் ஒரு புது உணர்வு.போர்களத்தில் பிறந்து அகதி முகாம்களில் வளர்ந்து ஆயுதங்களின் கோர ஒலிகளையும் அழு குரல்களையுமே ஆங்காங்கே தாலாட்டாய் கேட்டு வளர்ந்த ஒரு அனுபவமே எம் பலரின் உள்ளக் கிடக்கைகளில் புதைந்து கிடக்கின்றது.நடந்து வந்த பாதைகளை பலரில் ஒருவனாக நானும் திரும்பி பார்க்கும் போது பல வகையான எண்ணங்கள் மலர்ந்து மறைகின்றன.இவை எனக்குள் உற்பத்தி செய்யும் உணர்வலைகள் ஏராளம்.இவை இவ்வாறு இருக்க ,புதியதோர் நிலப்பரப்பில் பிறிதோர் அரசியல் கலாச்சார பெருவெளியில் நான் காணும் நிதர்சனங்கள் பல வேளைகளில் ஆச்சரியமாகவும் விநோதமாகவும் இருப்பதுண்டு.அவை பல்வேறு வகையானதாக இருப்பினும் ஒரு விடயத்தை மட்டும் சற்று ஆழமாகவும் அழுத்தமாகவும் ஆய்வு செய்ய விரும்புகின்றேன்.சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் பாட புத்தகத்தில் பரீட்சைக்காய் மட்டும் படித்த சுற்று சூழலியம் இங்கு அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தல்களில் பேசுபொருளாக மாறி இருப்பதும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இக்கருத்தியலை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகள்அண்மைக் காலங்களில் பெறும் மக்கள் ஆதரவு போன்ற விடயங்கள் எனக்குள் பல சிந்தனைகளை பிரசவிக்கின்றன.
இப்பூமி பந்தின் வரலாற்றினை சற்றே இரைமீட்டி பார்த்தல், என்றுமே மனித குலம் தன் வாழ்வுக்கான வளர்ச்சிக்கான தேடலில் முழு முனைப்போடு ஈடுபட்டிருப்பது எமக்கு தெளிவாகின்றது. சாயல்கள் மாறினாலும் இத்தேடல் இன்றும் உயிரோட்டமுடன் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது .இந்த 21 ஆம் நூற்றாண்டில் இடம்பெறும் தேடலின் இலக்காய் இயற்கை அமைந்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது.பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் இயற்கையுடன் இரண்டறக்கலந்திருந்த மனித வாழ்வியலானது அண்மை காங்களில் வளர்ச்சி,நாகரீகம்,முன்னேற்றம் என்ற தேவையான ஆனால் மனிதனை மட்டும் முன்னிறுத்திய ஏனைய படைப்புக்கள் மீதான ஓர் ஆதிக்க மனோ நிலை எம்மில் மேலோங்கியிருக்கிறது. இதன் காரணமாய் இயற்கையுடன் நாம் கொண்டிருந்த உறவு முறிவடைந்திருக்கின்றது என்றுதான் கூறவேண்டும் .இன்று பல நாடுகளில் மக்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ள ஒன்றுக்கொன்று முரணான காலநிலை மாற்றங்களும் பேரழிவுகளை ஏற்படுத்தும் இயற்கை அனர்த்தங்களும் இவ் உறவுமுறிவின் வெளிப்பாடுகளே .வெயிலில் குளிரும் குளிரில் வெப்பமும் பணம் படைத்தவர்களுக்கு சாத்தியமாகின்றது .ஆனால் ஒரு வேளை உணவிற்கும் ,ஒரு குடம் குடிநீருக்கும், வெறுமனே அடிப்படை தேவைகளுக்கும் தினம் தினம் போராட வேண்டிய நிலையில் உள்ள உலகின் பெரும்பான்மை குடிமக்களாம் ஏழைகளின் நிலையென்ன?எத்தனை உயிர்களையும் பலிகொடுத்து தத்தம் அரசியல் அதிகார இருக்கைகளை தக்கவைக்க தயங்காத மக்கள் தலைவர்கள் மலிந்து விட்ட இத்தரணியில் இயற்கை தாயின் அழுகுரல் கேட்க்க யார் தயார் ?இப்படி கேள்விகளை இன்று பலரும் எழுப்புகின்றார்கள் என்பதும் உண்மைதான் .நிச்சயமாக இவர்களின் முயற்சிகள் பாராட்டப்படவேண்டியது தான் .ஆனால்இவற்றை வெறுமனே அரசியல், பொருளாதார, அறிவுசார் ஒழுக்கநெறிகளுக்குள் மட்டுப்படுத்துவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் .ஏனெனில் கடவுள் தொடங்கி மனிதன் மற்றும் ஏனைய உயிருள்ள உயிரற்ற அத்தனை விடயங்களையும் வெறுமனே இலாபம் ஈட்டக்கூடிய விற்பனை பொருளாய் குறுக்கி விட்ட வர்த்தக நுகர்வு கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் சுற்றுசூழல் பாதுகாப்புக்கூட சுய இலாபம் தேடும் கட்டமைக்கப்பட்ட விம்பமாய் மாறாது என்பதற்க்கு எந்த உத்தரவாதமும் இல்லை .
இவ்விடத்தில்தான் உலகிற்க்கு ஒளியாய் வாழ அழைப்புப்பெற்ற கிறிஸ்தவர்களாகிய எங்கள் கடமைகள் என்ன என்ற தேடல் தொடங்க வேண்டும் .மத்5:14-16 .கிறிஸ்தவர்களாகிய எமக்கு இது தட்டிக்கழிக்க முடியாத கடமை. நீண்ட நெடிய நம் பாரம்பரியத்தின் நிகழ்கால ஆன்மிகக் கடமை. ஏனெனில் எம்மை பொறுத்த மட்டில் சுற்றுசூழல் பாதுகாப்பு என்பது எம்மையும் நாம் தாங்கி வாழும் சூழலையும் பற்றியது மட்டுமல்ல .மாறாக இவை அனைத்திற்கும் அடிநாதமாய் அமைந்த பேர் அன்பு கொண்டு எம்மை தாங்கும் இறைவனையும் பற்றியது .அவருக்கும் ,எமக்கும், நாம் காணும் படைப்பனைத்திற்கும் இடையிலான ஆழமான உறவை பற்றியது. பரந்து விரிந்த இப்பிரபஞ்சத்தின் இற்றைவரைக்குமான வரலாற்றை ஒரு நூலாய் தொகுத்தால் அதன் இறுதி 2,3 பக்கங்களில் தான் மனித வரலாறு தொடங்குகின்றது என்கிறார்கள் அறிவியலாளர்கள் .இதனையொத்த படைப்பின் ஒழுங்குமுறையைத்தான் வவிலியமும் எமக்கு விபரிக்கின்றது தொ.நூ1:1-31. இயற்கையின் அனைத்து கூறுகளையும் அதனதன் தனிப் பண்புகளோடு படைத்த பின் இறைவன் மனிதனை தன் சாயலாக உருவாக்கினார் தொ.நூ1:26. ஆகவே நாம் படைப்பில் தனித்துவமானவர்கள் தான். சிறப்பு மிக்கவர்கள்தான் .இறைவனின் இதயத்திற்கு நெருக்கமானவர்கள்தான் .இருப்பினும் இப்பண்புகளை நாம் ஏனைய படைப்புகளின்மீது செலுத்தும் அளவு மீறிய ஆதிக்கத்தின் ஊடாகவும், அவற்றை சிதைப்பதனுடாகவும் வெளிப்படுத்துவது நாம் செய்து வருகின்ற மிகப்பெரும் வரலாற்று பிழை. ஏனெனில் இறைவன் ,படைப்பு ,இதில் நாம் என்ற ஒழுங்கு முறை என்பது மாற்ற முடியாத ஒரு புனிதமான உறவுமுறை. கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி இல:291.படைத்தவரை பிரிந்து படைப்பாகிய நாம் நெடுநாள் இயங்கமுடியாது .யோவான் 15:4-6,க.திம:இல338.எனவே தான் திருத்தந்தை பிரான்சிஸ் 2015 ஆம் ஆண்டில் அனைத்துலக திருச்சபைக்கு எழுதிய இறைவா உமக்கு புகழ் என்ற சு ற்று மடலில் இயற்கையோடு ஒன்றிணைந்த ஒரு வாழ்க்கை முறையின் தேவையினை வலியுறுத்துகின்றார் இல 228 .சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வாழ்வை நேசிக்கும் ஒவொருவருவரின் கடமையாகஇருந்தாலும் ,கிறிஸ்தவர்களாகிய எமக்கு இறைவனே ஒப்படைத்த பாரிய பொறுப்பு .இதனை தொடர்ந்து ஆற்றுவதனுடாக மட்டும்தான் நாம் படைப்புக்கள் அனைத்திலிருந்தும் தனித்துவமானவர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்த முடியும் .எமது விவிலியப்பண்பாட்டிலும் சரி, நீண்டகால வரலாறு கொண்ட கீழைத்தேய மற்றும் மேலைத்தேய துறவற வாழ்விலும் சரி, பல்வேறுபட்ட மனிதர்கள் இறைவனை காணவும் ஆழமான ஆன்மிக அனுபவம் பெறவும் இயற்கையைத்தான் நெருங்கிச் சென்றார்கள்.
மோயீசனுக்கும் இறைவனுக்குமான சந்திப்புக்கள் சினாய் என்ற மலையில் தான் இடம்பெறுகின்றன விப:19. இஸ்ரேயலின் மக்களின் வாழ்க்கை பயணங்களில் இறைவன் தன்னை நெருப்பு ,மேகம், காற்று என்ற இயற்கயின் வெவ்வேறு கூறுகள் ஊடாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் .அவர் தன் உடனிருப்பை உறுதி செய்து தம்மை பசும்புல் வெளிகளுக்கும் அமைதியனான நீர்நிலைகளுக்கும் அழைத்துச்செல்வதாய் தாவீது படுகின்றார் திபால்:23 .எலிசா போன்ற இறைவாக்கினர்கள் இயற்கையிலேயே இறைவனை கண்டு கொண்டனர் 1அரச 19 .இவ்வாறு பழைய ஏற்றப்பாடு முழுவதுமே இயற்க்கையின் எழில்மிகு காட்ச்சிகளால் நிறைந்து கிடக்கின்றது .இவை அனைத்தும் இயற்கை இறைமனித உறவின் ஊடகம் என்பதற்க்கான சான்றுகளே. இவைமட்டுமல்ல மனுவுரு எடுத்த இறைமகன் ஜேசுவுக்கு கூட தம்மை புடமிடுவதற்க்கு ஒரு தனிமையான பாலைவன அனுபவம் தேவையை இருந்த்தது மத் 4:1-11. தந்தையுடன் உறவாட ஜேசு இயற்கயின் இதமான தருணங்களை பலதடவைகள் தேடிச்சென்றார். லூக் 5: 16, 6 :12. அவர் தம் இவுலக வாழ்வின் வலிசுமந்த அவ்விறுதி இரவுகூட ஒலிவ மரங்கள் சூழ்ந்த இயற்கையில்த்தான் கழிகின்றது மத் 26 :36-46 .அனைத்துக்கும் மேலாக இஜேசுவின் போதனைகள், அவற்றை மக்களுக்கு விளக்க அவர் கையாண்ட உவமைகள் ,காட்சிகள் அனைத்தும் அவர் உள்ளத்தில் நிறைந்திருந்த இயற்கையின் அனுபவங்கள். இவரின் இறப்பின் போது நிலம் நடுங்கியது பாறைகள் பிளந்தன நண்பகல் 12.00 மணிக்கு நாடெங்கும் இருள் உண்டாயிற்று என்று விளக்குகின்றன நற்செய்தி நூல்கள் மத் 27:51.இவை யாவும் இயேசுவுக்கும் இயற்கைக்கும் இடையிலான நெருக்கமான உறவினையே விபரிக்கின்றன.
இயற்கையும் புனிதர்களும்
இயற்கையோடு நாம் கொள்ளும் உறவிற்கு ஒரு ஆழமான மீட்க்கும் வல்லமை உண்டு.விவிலியத்தில் நாம் அடிக்கடி படிக்கின்ற இயற்கையின் அழகும் நன்மை தனமும் இறைவனின் மகிமையே என்கிறார் புனித இரண்டாம்அருள்சின்னப்பர் .மண்ணையும், நீரையும், வயல் வெளிகளையும் காணும்போதெல்லாம் அவற்றில் நான் படைத்தவரின் நினைவுகளை கண்டு கொண்டேன் என எழுதினார் புனித அவிலா தெரசா.இறைவனை நாம் அனுபவிக்க இயற்கையை விட சிறந்த ஒரு ஊடகம் இருக்கவே முடியாது .இதைத்தான் புனித அகுஸ்தினார் சிலர் இறைவனை அறிய நூல்களை படிக்கின்றனர் .ஆனால் படைப்பெனும் மிகச் சிறந்த நூல் ஒன்று இருக்கிறது .அதை கூர்ந்து நோக்கி ,படித்துக் குறிப்பெடுங்கள். நீங்கள் தேடும் இறைவன் இவற்றை மை கொண்டு எழுதவில்லை. மாறாக தன் கை கொண்டு படைத்தவற்றை உங்களுக்கு அருளினார். இதனை விட சிறந்த குரல் ஒன்று இருக்க முடியுமா என்றார்.ஆகவே இயற்கையை விட்டு விலகிய ஓர் இறைத் தேடல் சாத்தியமற்றது. எனவே படைத்தவரை ஓரம்கட்டிய எந்தவொரு சுற்றுச்சூழல் முயற்சியும் விழலுக்கிறைத்த நீர் போல் ஆகிவிடும். நம்பிக்கையின் மக்களாகிய நாம் இதனை புரிந்துகொள்ளவேண்டும்.
சமகால நிதர்சனங்கள்
நல்ல சமாரியன் உவமையில் சித்தரிக்கப்படும் வழிப்போக்கனின் நிலைதான் இன்று பூமித்தாய்க்கு. கள்வர் கையில் அகப்பட்டு, ஆடைகள் உரியப்பட்டு,அடித்து குற்றுயிராய் விடப்பட்டிருக்கிறாள் யோவா10:25-37.புனித பிரான்சிஸ் அசிசியார் உரிமையோடு உறவு சொல்லி அழைத்த படைப்பு இன்று அவலக் குரல் எழுப்புகிறது.கடல் தரை மலை என நீண்டு செல்லும் இயற்கை வளங்கள் சுயநலத்தோடு சுரண்டப்படுகின்றன.நீர்,வளி,ஒளி போன்ற இயற்கையின் கொடைகள் நாளும் மாசுபடுத்தப்படுகன்றன.பறவைகள் விலங்குகள் மீனினங்கள் என விரிந்து செல்லும் உயிரினப் பன்மயம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றது.இது போன்ற வன்முறைகளில் ஈடுபடும் போதும்,இச் செயல்களை கண்டுகொள்ளாமல் இருக்கும்போதும் நாம் படைப்பிலிருந்தும் படைத்தவரிடமிருந்தும் பிரிந்து செல்கிறோம். இது மட்டுமல்ல எம்மைப் போன்ற எம் உறவுகளின் வாழ்வுரிமை மறுக்கப்படும்போதும் கேட்பார் யாருமின்றி மக்கள் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்படும் போதும், வாழ்விடம் தேடி வரும் அப்பாவி மக்களுக்கு போரையும் பேராயுத ஆலைகளையும் பொருளாதாரமாக கொண்ட நாடுகள் தம் வாயில்களை மூடும் போதும் மனுக்குலம் இறைவனுக்கு புறமுதுகு காட்டுகின்றது. விவசாய நிலங்கள் ஒழிக்கப்பட்டு ,இயற்கை காடுகளும் நீர் நிலைகளும் நிர்மூலமாக்கப்பட்டு ,விசாலமான கட்டிடக் காடுகள் அமைப்பதுதான் வளர்ச்சி என்ற போலிகள் எமக்கு போதிக்கப்படுகின்றது .கடல் வளங்கள் இயந்திரக் கரம் கொண்டு சூறையாடப்படுகின்றன. மூன்றாம் உலக நாடுகள் பல இன்று செல்வந்த நாடுகளின் குப்பைத் தொட்டிகளாகவும் பன்னாட்டு நிறுவனங்களின் நவீன காலணித்துவ களங்களாகவும் மாறியிருக்கின்றன .இப்படியான அன்பு நீதி மற்றும் சமத்துவமற்ற போக்குத்தான் இன்றைய உலகில் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்குமான இடைவெளியை என்றுமில்லாதவாறு அதிகரித்திருக்கின்றது.உலகில் வாழும் 3.8பில்லியன் மக்களுக்கு உரித்தான வளங்கள் வெறுமனே 26 தனிச் செல்வந்தர்களின் கைவசம் உள்ளது.இந்த 3.8 பில்லியன் என்பது உலக ஏழைகளின் மொத்த தொகையில் அரைவாசி.(oxfarm அறிக்கை01.20.2019.)இத் தரவுகளை பார்க்கும்போது "அவர்கள் செல்ல வேண்டாம்.நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று சீடரைப் பார்த்து கூறிய இயேசுவின் வார்த்தைகள் ஞாபகம் வருகின்றது மத்14:16."எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களையும் தவிர வேறொன்றும் இல்லை" என பொறுப்பற்ற முறையில் நாம் கை விரிக்க முடியாது.ஏனனில்,இவை அனைத்தையும் உள்ளடக்கிய கிறீத்தவ கடமைகளுடன் சமரசம் செய்வது தவறு என்கிறது திரு அவை.(தி.த16ம் பெனடிக்ற்,Caritas in veritate இல48,51).
முடிவுரை
நியாயமான அரசியல் உரிமைகளுக்காகவும்,நீதிக்காகவும்,பல இழப்புக்களையும் தாண்டி இன்றும் நாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம் என்பது உண்மைதான்.இவற்றோடு இணைத்து ,இப்
பிரபஞ்சத்தில் நாம் வாழ இன்றுவரை சாத்தியமாய் இருக்கின்ற ஒரேயொரு பொது இல்லமாகிய இப் பூமித்தாயின் பாதுகாப்பிற்காகவும் நாம் உழைக்க வேண்டியிருக்கிறது.நாம் கண்ட வலிகளையும் இழப்புக்களையும் வருகின்ற தலைமுறைக்கு அப்படியே கடத்தி விடக் கூடாது.அவர்கள் வாழமுடியாத ஒரு சுற்றுச்சூழலை அவர்களுக்கு நாம் விட்டுச்செல்ல முடியாது.துன்பத்தின் தழைகள் தகர்ந்து,இறப்பின் கல்லறைகள் திறந்து,உயிர்ப்பு என்ற விடுதலை உண்மையாய் பிறக்கும் என்பதனை உறுதி செய்த கிறீஸ்த்துவின் சீடர்கள் நாம்.இதே நம்பிக்கையின் ஆற்றல் கொண்டு உறங்கும் எங்கள் உள்ளங்களை உயிர் பெறச் செய்ய வேண்டும்.அனைத்துலக சவாலாக உருவெடுத்திருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் எங்கள் மத்தியில் உணரப்பட வேண்டும்.இதற்கான சிந்தனை செழுமையும்,வளங்களும் ,வழிமுறைகளும் நம்
பழந்தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் சிதறிய முத்துக்களாய் பரவிக் கிடக்கின்றன.இவற்றை நாம் நற்செய்தியின் ஒளியிலே புடமிட வேண்டும்.இதன் தேவையினை உணர்ந்தவர்களாய் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பரந்த உலகப் பார்வையும் ,பல்லுயிர் நேயமும் கொண்டு விண்ணரசு மண்ணில் மலர எம்மையே அர்ப்பணிப்போம்.


2 Comments
மிகவும் ஆழமான பொருள் அடங்கிய தொகுப்பு கட்டுரை....
ReplyDeleteமிக்க நன்றி.
Delete